உலக கோப்பை திருவிழா கடந்த 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கிய நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், 2வது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும் வெற்றி பெற்றது. இந்திய அணி வருகின்ற 5 ஆம் தேதி தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இந்திய அணி நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து பேசியுள்ளார். தற்போது வரை ஐசிசி நடத்திய உலக கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் அணி, இந்திய அணியை வீழ்த்தியது கிடையாது. இந்த சாதனையை இம்முறையும் தொடர வேண்டும் என இந்திய ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
இந்திய அணியில் உள்ள எந்த வீரரும் தற்போது இந்தியா – பாகிஸ்தான் போட்டி குறித்து சிந்திக்க மாட்டார்கள். காரணம் அதற்கு நடக்க இருக்கும் போட்டிகள் முக்கியம். தொடக்க ஆட்டங்களை சிறப்பாக விளையாடி வென்று விட்டால் இந்திய அணிக்கு பாகிஸ்தான் போட்டி ஒரு விஷயமாக இருக்காது. ஆனால் ஒருவேளை தொடக்க ஆட்டத்தில் நாம் தோல்வியை சந்திக்க நேர்ந்தால், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி மீது அழுத்தம் அதிகரிக்கும்.
இதனால் தொடக்க ஆட்டங்களில் வெற்றி பெறுவது முக்கியம். அப்படி வெற்றி பெற்றுவிட்டால், பாகிஸ்தான் அணிக்கு எதிராக உலக கோப்பை சாதனை தொடரும். பாகிஸ்தான் அணி இந்திய அணியை வெல்ல முடியாது. இந்த உலக கோப்பையில் கேப்டன் கோலி இந்திய அணிக்கு முக்கிய வீரராக இருப்பார். இந்த தொடரில் தோனியின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும். அவர் இந்திய அணிக்காக நிறைய செய்துள்ளார்.
இந்திய அணியில் அனுபவமிக்க வீரர் தோனி தான். இந்த தொடரில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தான் பலமான அணிகளாக தெரிகிறது. அந்த இரண்டு அணிகளை இந்தியா வென்றுவிட்டால், இந்தியா உலக கோப்பையை வெல்வதை வேறு எந்த அணியாலும் தடுக்க முடியாது.
என்னை பொருத்தவரை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணியை குறைத்து மதிப்பிட முடியாது. இந்த தொடரில் அவர்கள் சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக விளையாடுகிறார்கள். போட்டி நடக்கும் நாளில் அவர்களின் அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்த போட்டியை வெல்ல திறன் கொண்டவர்கள் என்பது தெரியவரும் என்று கூறினார்.