ஹலால் இலச்சினையை நீக்கிய நிறுவனம்!

இலங்கையின் முன்னணி நிறுவனம் ஒன்று தனது தயாரிப்புகளில் ஹலால் இலச்சினை பயன்படுத்துவதை நேற்று நிறுத்தியுள்ளது.

நெல்னா என்ற இந்த நிறுவனத்தின் 20 ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதன் முகாமையாளர் கபில ராஜபக்ச கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.

நுகர்வோர், விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்களின் கடும் கோரிக்கைக்கு அமைய ஹலால் இலச்சினையை தமது தயாரிப்புகளில் பயன்படுத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஹலால் இலச்சினைக்கு கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. இதனால், பல முன்னணி நிறுவனங்கள் தமது தயாரிப்புகளில் ஹலால் இலச்சினை பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளன.

குறிப்பாக கோழி இறைச்சி போன்ற உணவு உற்பத்திகளை மேற்கொண்டு வரும் நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்துள்ளன.

ஹலால் இலச்சினை அச்சிடப்பட்ட உணவுகளையே முஸ்லிம் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன் முஸ்லிம் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உணவு பொருட்களில் ஹலால் இலச்சினை அச்சிடப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.