அமைச்சர் ரிஷாத் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி ஆகிய மூவரும் தமது பதவிகளிலிருந்து விலகவுள்ளனர். தமது பதவி விலகல் கடிதங்களை விரைவில் மூவரும் ஒப்படைப்பார்கள் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
அத்துரலிய ரத்ன தேரர் ஆரம்பித்துள்ள போராட்டம் சிங்கள – முஸ்லிம் இனக் கலவரமாக மாறும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கோரியமையாலும், அவர்கள் தமது பதவிகளைத் துறப்பதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளனர் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தால் இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து முஸ்லிம் அரசியல்வாதிகளான அமைச்சர் ரிஷாத் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி மூவருக்கும் எதிராக கடுமையான பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டன.
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கும், அதற்கு உதவிய தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்புக்கும் இந்த மூவருக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதனை எதிர்கொள்ளத் தயார் என்றும் எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிந்து தனது பதவியைத் துறக்க மாட்டேன் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்தநிலையில், அத்துரலிய ரத்ன தேரர், தலதா மாளிகை முன்பாக நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். மூவரும் பதவி விலகும் வரையில் தான் போராட்டத்தைக் கைவிடமாட்டேன் என்று சூளுரைத்துள்ளார்.
தேரரின் போராட்டம் காரணமாக, சிங்கள – முஸ்லிம் கலவரம் ஏற்படலாம் என்று அரசின் உயர்மட்டத் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்தே மூவரையும் தற்காலிகமாக பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ளது.
விரைவில் மூவரும் தற்காலிகமாகப் பதவி விலகுவார்கள் என்று அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.