இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் மொபைல் போனில் இருந்த இளம்பெண்ணின் புகைப்படத்தால் இரண்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் மீரட் பகுதியை சேர்ந்தவர் 30 வயதான சுபம் குமார். இவர் தமது பயன்படுத்திய மொபைலை விற்பனை செய்துள்ளார்.
இச்சம்பவமே அப்பகுதியில் நடந்த தற்கொலைக்கும் கொலைக்கும் காரணமாக அமைந்துள்ளது.
தனது மொபைலை விற்பனை செய்வதற்கு முன்னர் சுபம் குமார் அதில் இருந்த தமது காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அழிக்க மறந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுபம் குமாரிடம் இருந்து மொபைலை வாங்கிய அனூஜ் பிரஜாபதி என்பவர், குறித்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதனிடையே சுபம் குமாரின் முன்னாள் காதலி தமது புகைப்படங்கள் வைரலானதை அடுத்து,
அருகாமையில் உள்ள ஆற்றில் குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். குழந்தையை அப்பகுதி மக்கள் காப்பாற்றியுள்ளனர், ஆனால் அப்பெண் பரிதாபமாக மரணமடைந்தார்.
தற்கொலை தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காதலியுடனான புகைப்படங்கள் வைரலானதும், சுபம் குமார் அனூஜ் பிரஜாபதியை சந்தித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இதில் இருவரும் வாக்குவாதத்தில் ஏற்படவே, இறுதியில் சுபம் குமார் அனூஜை கொலை செய்துள்ளார்.
பொலிசார், இந்த விசாரணை தொடர்பில் சுபம் குமாரை தேடி வந்த நிலையில், அனூஜ் கொலை செய்யப்பட்ட தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து பொலிசார் சுபம் குமார் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்துள்ளனர்.