இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் 12வது உலக கோப்பை போட்டிகள் ஒவ்வொரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் ஆடி விட்டார்கள். இன்னும் இந்திய அணி மட்டும் முதல் போட்டியை தொடங்கவில்லை. இந்திய அணி வருகின்ற ஐந்தாம் தேதி தென் ஆப்பிரிக்க அணியுடன் தன்னுடைய முதல் போட்டியில் களம் இறங்குகிறது. இந்திய அணிக்கு முதல் போட்டி ஆனால் அந்த ஆட்டம் தென் ஆப்பிரிக்க அணிக்கு மூன்றாவது ஆட்டம் ஆகும்.
இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒரு அணியாக இந்திய அணி இருந்து வருகிறது. அதற்கு மிக முக்கிய காரணம் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களும், தொடக்க ஆட்டக்காரர்களும் தான். இந்நிலையில் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் கேப்டன் விராட் கோலி, நேற்றைய பேட்டிங் பயிற்சி செய்யும்போது காயமடைந்து உள்ளார் என்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விராட் கோலிக்கு ஒரு பந்து அவருடைய கையின் பெருவிரலில் தாக்கியதில் அவர் காயமடைந்துள்ளார். உடனடியாக கையுறையை கழற்றி பார்த்தபொழுது கையில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஐஸ் கட்டிகளை வைத்து சிகிச்சை பெற்றுக் கொண்ட விராட் கோலி பின்னர் சிறிது நேரம் பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டார். ஆனால் வலி தாங்க முடியாத விராட் கோலி பயிற்சியை விரைவாக முடித்து கொண்டு அறைக்கு சென்றுவிட்டார்.
இதனையடுத்து அவர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் களம் இறங்குவாரா? அதற்குள் காயம் சரியாகுமா என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஒருவேளை அவர் விளையாட முடியாவிட்டால் ரோகித் சர்மா இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து செயல்படுவார் என தெரிகிறது.