நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக ஏற்படுத்தப்பட்ட கூட்டணி ஒப்பந்தத்தின்படி, அதிமுக கூட்டணியில் இணைந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு, 7 மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கொடுக்கப்படும் என ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால் இந்த கூட்டணி எதிர்பாராத தோல்வியை சந்தித்ததால் பாமகவுக்கு ஒப்பந்தம் போடப்பட்ட படி ராஜ்யசபா சீட் வழங்கப்படுமா? என்ற சந்தேகம் அனைவரிடத்திலும் எழுந்துவருகிறது.
இது குறித்து பலவாறான பேச்சுக்கள் இருக்கும் நிலையில், இன்று தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர் ஜெயக்குமார், நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாமகவிற்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படுமா? என்று கேட்ட கேள்விக்கு நாங்கள் எப்போதுமே ஜென்டில்மேன், போட்ட ஒப்பந்தப்படி கடைபிடிப்போம் என தெரிவித்துள்ளார்.
மேலும் உங்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டதா? நீங்கள் கேட்டீர்களா? என்று கேட்ட கேள்விக்கு, நாங்கள் திமுகவைத் போல பதவி வெறிபிடித்து அலையவில்லை. மத்திய அரசு எங்களை அழைத்து உங்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கின்றோம் என்று பேசினால் அது குறித்து எங்கள் கட்சி தலைமை முடிவு செய்யும்.
மற்றபடி திமுக போல தேர்தலுக்கு முன்பாகவே அந்த ஓடத்தில் ஒரு கால், இந்த ஓடத்தில் ஒரு கால் என மாறி மாறி காலை வைத்து பதவி வெறிபிடித்து அலையும் இயக்கம் அதிமுக அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாமகவிற்கு அதிமுக போட்ட ஒப்பந்தப்படி ஒரு ராஜ்யசபா சீட் வழங்கும் என தெரிகிறது.