அவசரப்பட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி…. 44 நாட்களுக்கு பின் வெளியான உண்மை

தேர்வில் தோல்வியடைந்து விட்டதாக வந்த முடிவால் 44 நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட மாணவி, தற்போது மறுகூட்டலில் தேர்ச்சி பெற்றிருப்பதாக வந்துள்ளது.

ஐதராபாத்தில் 11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் 18ம் திகதியன்று வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெறவில்லை என 26 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டனர்.

இவர்களை போலவே அனாமிகா அருதுளா (17) என்கிற மாணவியும் தன்னுடைய பாட்டி வீட்டில் இருக்கும் போது தற்கொலை செய்துகொண்டார்.

தெலுங்கு மொழி பாடத்தில் 20 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்ததாக முடிவு வெளியாகியிருந்தது. அதனை மறுகூட்டல் செய்வதற்கு, அனாமிகாவின் சகோதரி உதயா விண்ணப்பித்திருந்தார்.

அதற்கான முடிவுகள் திங்கட்கிழமையன்று வெளியானது. அதில், அனாமிகா 48 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருப்பதாக வந்துள்ளது.

இதனை பார்த்து கோபமடைந்துள்ள அவருடைய சகோதரி, என்னுடைய தங்கை தற்கொலை செய்துகொள்ளவில்லை. இது நிச்சயமாக அரசாங்கம் செய்த கொலை.

அவள் இறந்ததை கேள்விப்பட்டதிலிருந்து என்னுடைய அம்மா, அப்பா மனம் உடைந்து போயுள்ளனர். என் சகோதரி திரும்பி வரமாட்டாள் என்று எனக்கு தெரியும். ஆனால் அவளுக்காகவும் என் பெற்றோர்களுக்காகவும் நான் நீதி கேட்டு போராடுவேன் என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரமானது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தெலுங்கானா இடைநிலை கல்வி பொறுப்பாளர் அசோக் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அதில், அனாமிகாவின் தற்கொலைக்கு எங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டிற்கு நாங்கள் மறுப்பு தெரிவிக்கிறோம். மறுகூட்டலில் அனாமிகா 21 மதிப்பெண்கள் மட்டும் தான் பெற்றிருக்கிறார். அதற்கான சான்றுகளையும் நாங்கள் வழங்க தயார். 48 என தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.