சிக்கிக் கொண்டாரா ஹிஸ்புல்லாஹ்? வெளியாகியுள்ள சிசிடிவி காணொளியால் சர்ச்சை

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், தொடர்பில் வெளியாகியுள்ள காணொளியினால் அரசியல் மட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பரபரப்பையும் சந்தேகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் சிக்கல்களுக்கு கிழக்கு ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விற்கும் தொடர்பு இருப்பதாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் பகிரங்கமாகவே குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவருகின்றனர்.

இந்நிலையில் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, அமைச்சர் ரிசாத் பதியுதீன் போன்றவர்கள் பதவி விலக வேண்டும் என அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. இதற்கிடையில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

தேரரின் உண்ணாவிரதத்திற்கு பெருமளவிலானோர் ஆதரவு கொடுத்துள்ள நிலையில், ஜனாதிபதியும், பிரதமரும் தீர்க்கமான முடிவினை எடுப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

இதுவொருபுறமிருக்க, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள காணொளியினால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

குறித்த காணொளியானது, மட்டக்களப்பில் அமைந்துள்ள பாசிக்குடா ஹோட்டல் ஒன்றின் சிசிடிவியில் இருந்து பெறப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

அக்காணொளியானது ஏப்பிரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களுக்கு மறுதினம் பதிவாகியுள்ளது. இதன்போது, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பாசிகுடா பகுதியில் உள்ள ஹோட்டலுக்குச் சென்று சவுதி நாட்டவர்கள் சிலரை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அன்றைய தினம் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இரவு 9.12 மணியளவில் கிழக்கு மாகாண ஆளுநர், அந்தக் ஹோட்டலுக்கு வந்துள்ள விதம் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.

பின்னர் அந்த ஹோட்டலுக்கு வந்திருந்த சிலர் அவரை காண வந்தனர். அவர்களுடன் 9.13 மணியளவில் விருந்தகத்திற்குள் செல்லும் கிழக்கு மாகாண ஆளுநர், 53 நிமிடங்களுக்கு பின்னர், அதாவது 10.06 மணியளவில் அங்கிருந்து குறித்த தரப்பினருடன் வெளியேறுகிறார்.

இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுடன் சவுதி நாட்டவர்கள் சிலரும் உடன் வெளியே வந்து, அவரை வழியனுப்பி வைப்பதும் பதிவாகியுள்ளதுடன், ஒரு சூட் கேஸ் ஒன்றினையும் எடுத்துச் செல்வதும் பதிவாகியிருக்கிறது.

இக்காட்சிகள் வெளியாகியுள்ளமையினால் சர்ச்சை நிலை ஏற்பட்டிருக்கிறது. இக்காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், அந்த ஊடகம் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் தொடர்பு கொண்ட போதும், அவர் அழைப்பினை ஏற்கவில்லை என்றும் செய்தி வெளியிட்டிருக்கிறது.

நாட்டில் நடைபெற்ற வன்முறைகளுக்கு ஹிஸ்புல்லாவிற்கு தொடர்பிருப்பதாக தேரர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நிலையில் இக்காணொளி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பல்வேறு சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது.

உண்மையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தியிருந்த வேளையில் அவர் ஏன் அந்தக் ஹோட்டலுக்கு வந்தார்? அங்கு தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் யார்? அந்தப் பெட்டியில் என்ன இருந்தது? 53 நிமிடங்கள் என்ன பேசினார்கள்? போன்ற பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியிருக்கின்றன. இது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று தென்னிலங்கையில் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.