சஹ்ரானை கைது செய்ய சென்ற பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி!

இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டு நடத்திய சஹ்ரான் ஹசீமை கைது செய்ய பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கைது செய்யப்படாமல் தடுக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாக பொறுப்புக் கூற வேண்டும் என தெரியவந்துள்ளதாக லங்கா என்ற சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளது.

அத்துடன் ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த தாக்குதலை தடுக்க தவறியமை சம்பந்தமாக ஜனாதிபதி உட்பட அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஹ்ரானை கைது செய்ய பயங்கரவாத விசாரணை பிரிவு கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீதிமன்றத்தின் ஊடாக பகிரங்க பிடியாணையை பெற்று கொண்டுள்ளது.

எனினும் ஜனாதிபதி உட்பட முக்கியஸ்தர்களை கொலை செய்ய சதித்திட்டம் இருப்பதாகவும் அதில் பயங்கரவாத விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த நாலக டி சில்வாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் நாமல் குமார என்ற நபர் வெளியிட்ட தகவல்கள் ஊடகங்களில் பிரசாரப்படுத்தப்பட்டன.

இந்தியாவின் றோ புலனாய்வுப் பிரிவு தன்னை கொலை செய்ய திட்டமிடுவதாக ஜனாதிபதி கூறியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அன்றைய பொறுப்பதிகாரி நாலக டி சில்வா கைது செய்யப்பட்ட பின், பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சஹ்ரான் ஹசீம் கைது செய்யப்படுவது முற்றாக தடைப்பட்டது.

நாமல் குமார கூறியதை தவிர ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பாக ஏற்று கொள்ள கூடிய எந்த சாட்சியங்களும் விசாரணைகளில் கிடைக்கவில்லை.

அதேவேளை ஈஸ்டர் ஞாயிறு நடந்த தாக்குதலை தடுக்க அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என தாக்குதல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தெரியவந்துள்ளது.

சாதாரணமாக ஜனாதிபதி தலைமையில் மாதந்தோறும் கூட்டப்பட வேண்டிய தேசிய பாதுகாப்புக்கு முக்கியமான பாதுகாப்பு சபை இறுதியாக கடந்த பெப்ரவரி 19ஆம் திகதியே கூட்டப்பட்டுள்ளது.

இதன் பின்னர், ஏப்ரல் 21ஆம் திகதி வரை பாதுகாப்புச் சபை கூட்டப்படவில்லை என பாராதூரமான குற்றச்சாட்டு ஜனாதிபதி மீது சுமத்தப்படுவதை தவிர்க்க முடியாது போயுள்ளது.

ஏப்ரல் 9ஆம் திகதி செவ்வாய்கிழமை பாதுகாப்பு புலனாய்வு மீளாய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது பிரதி செவ்வாய்கிழமை தோறும் தொடர்ந்தும் நடைபெறும்.

இந்த கூட்டத்தில் கட்டாயம் கலந்துரையாடப்பட வேண்டிய தாக்குதல் தொடர்பாக முழுமையான தகவல்கள் குறித்து எவரும் பேசவில்லை என தேசிய புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ் கடந்த 29 ஆம் திகதி தகவல் வெளியிட்டிருந்தார்.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவின் தலைமையில் இந்த பாதுகாப்பு புலனாய்வு மீளாய்வு கூட்டம் நடந்துள்ளது.

இந்த கூட்டத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன கலந்து கொள்ள வேண்டும் என்ற போதிலும் அவரும் அதில் கலந்து கொள்ளவில்லை.

தாக்குதல் தொடர்பான தகவல்களை பிரதமர் உட்பட அரசாங்கம் அறிந்திருக்கவில்லை என கூறினாலும் அமைச்சர்களின் குடும்பங்கள் கூட அறிந்திருந்தது என்பது அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் தகவல் மூலம் தெரியவந்தது.

எதிர்வரும் 4ஆம் திகதி சாட்சியங்களை விசாரிக்க கூடவுள்ள விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாலக டி சில்வா உட்பட மேலும் சில பாதுகாப்பு முக்கியஸ்தர்கள், சாட்சியங்களை பெற அழைக்கப்பட உள்ளனர்.

இதன் போது மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

ஏப்ரல் 8ஆம் திகதி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் கூட்டத்தில் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான தகவல் தனக்கு தெரிவிக்கப்பட்டது என வெளியாகிய செய்தியில் உண்மையில்லை என ஜனாதிபதி சார்பில் வெளியிடப்பட்ட அவசர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளில் தனக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் ஜனாதிபதி இந்த அவசர அறிக்கையை வெளியிட்டுள்ளாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.