சிறுபான்மை இனங்களான தமிழ், முஸ்லிம் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை?

இலங்கையில் இன்று இடம்பெற்ற சம்பவம் சிறுபான்மை மக்களுக்கு எச்சரிக்கை விடும் தகவலாகவே அமைந்துள்ளது.

பௌத்த சித்தாங்களின் அடிப்படையில் ஆட்சியாளர்கள் செயற்படுவதால் பௌத்த துறவி நினைத்தால் எதனையும் சாதிக்க முடியும் என்பதே இன்றைய சம்பவம் நிகழ்த்தி நிற்கின்றன.

இன்று அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டமை, முஸ்லிம் மக்களுக்கு எதிரானது மாத்திரமல்ல. இதுபோன்றதொரும் சம்பவம் நாளை தமிழர்களுக்கும் நடக்கும் என்பதை பறைசாற்றுகின்றது.

கடந்த காலங்களை பெரும்பான்மை சமூத்தினர் தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆட்சி செய்ய முற்பட்டனர். எனினும் விடுதலைப் புலிகள் எனும் பாரிய தடுப்பு சுவரினால் அது சாத்தியமற்றதாக காணப்பட்ட போதும், 30 ஆண்டுகளின் பின்னர் இன அழிப்பினை மேற்கொண்டு தமது எண்ணங்களை நிறைவேற்றிக் கொண்டனர்.

சமகாலத்தில் முஸ்லிம் மக்களை சீண்டி விட்டு, மற்றொரு வன்முறைகளை முன்னெடுக்க திட்டமிட்டு வருகின்றனர்.

எனி வரும் காலங்களில் தமிழ் – முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டிய காலம் தற்போது ஏற்பட்டுள்ளது.

இன்று மூன்று முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளை ஆட்சியிலிருந்த வெளியேற்ற முடிந்த பிக்குவால் நாளை, சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பது இன்றைய ஆட்சி முறையாக உள்ளது.

இன்றைய கசப்பான சம்பவங்கள் சிறுபான்மை மக்களை பெரிதும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் சில தரப்பினர் (தமிழ், முஸ்லிம்) இனவாத ரீதியான பின்னூட்டங்களை பகிர்ந்து வந்தாலும் ஒட்டுமொத்த சமூகமும் அப்படி இருக்கவில்லை.

உண்மையில் தற்போதைய நிலையில் முஸ்லிம் சமூகம் மிகவும் அச்சமான சூழ்நிலையிலேயே உள்ளனர். கோடிக்கணக்கான முதலீடுகளை போட்டு வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் முஸ்லிம் வர்த்தகர்கள் தமது உடமைகளுக்கு எப்போது ஆபத்து வரும் என்று அச்சத்தில் உள்ளனர்.

மார்க்க அடையாளங்களுடன் வெளியில் செல்லும் பெண்கள் எவ்வாறான இம்சைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவ, மாணவிகள் புறக்கணிக்கப்படுவோமா என்ற அச்சத்தில் உள்ளனர்.

சிறு வியாபாரங்களான சாப்பாட்டு ஹோட்டல், பலசரக்கு கடைகளை நடத்தி வரும் முஸ்லிம் வர்த்தர்கள் பெரும்பான்மையினத்தவர்களின் புறக்கணிப்பால் பெரும் நஷ்டங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். பலர் தமது கடைகளை மூடிவிட்டு வீடுகளில் இருக்கின்றனர்.

இப்படியான பல நெருக்கடிகளுக்கு முஸ்லிம் சமூகம் தற்போது முகங்கொடுத்துள்ளது. கடந்த காலங்களில் இதேபோன்ற துன்புறுத்தல்களை புறக்கணிப்புகளை தமிழ்ச் சமூகம் எதிர்நோக்கியிருந்தது.

சமூக வலைத்தளங்களில் சில அரசியல்வாதிகளின் தேவைக்காக இனவாத கருத்துக்களை பகிருவோர் சிறுபான்மை சமூகங்கள் எதிர்நோக்கும் சமூக பிரச்சினை குறித்து சிந்திப்பதில்லை. ஆபாசம் கொட்டும் துர்வார்த்தைகளால் இனங்களை அசிங்கப்படுத்துவதே இவர்களின் வேலையாகும்.

இன்று ஒரு பௌத்த துறவியால் இருவரின் பதவியை பறிக்க முடிந்துள்ளது. நாளை பல துறவிகள் இணைந்தால் பல மாற்றங்ளை ஏற்படுத்தலாம்.

இன்றைய கசப்பான சம்பவம் எந்வொரு சிறுபான்மை சமூகத்தவர்களும் கொண்டாடக் கூடிய ஒன்று அல்ல. இது சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான அழிவின் ஆரம்பமே.

தமிழ், முஸ்லிம் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டிய காலம் இதுவாகும்.

இதற்கும் சமூக வலைத்தள போராளிகளின் வசைபாடல்கள் இருக்கத்தான் செய்யும். நிகழ்கால அரசியல் மாற்றங்களில் இவை யதார்த்தமானவையே..