ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களின் பின்னதான பொருளாதார மீட்புத்திட்டம் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிரக்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இடையிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடலொன்று இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது.
எதிர்க்கட்சி தலைவரின் வேண்டுக்கோளுக்கு இணங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது வழங்கல் அமைச்சர் ஹர்ஷா டி சில்வ, பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, சுசில் பிரேமஜயந்த, பந்துல குணவர்தன, காமினி லொகுகே, உதய கம்பன்பில, பிரதமரின் செயலாளர் சமன் ஏகநாயக, நிதி அமைச்சின் செயலாளர். ஆர்.எச். எஸ் சமரதுங்க, மத்திய வங்கயின ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.
இந்த கலந்துரையாடலின் போது குண்டுத்தாக்குதல்களை அடுத்து அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட குழுவினருக்கு பிரதமர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ள பொருளாதார வேலைத்திட்டங்கள் தொடர்பில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் விளக்கமளித்துள்ளார். அதே சந்தர்ப்பத்தில் எதிர்கால பொருளாதார திட்டங்கள் தொடர்பிலும் இருத்தரப்பினருக்கும் இடையில் தகவல் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த சந்திப்பு தொடர்பில் ஹர்ஷ டி சில்வா தனது உத்தியோகபூர்வ டுவிடர் பக்கத்தில்,
நாட்டின் தற்போதைய நிலைமைகளில் இதுபோன்ற சந்திப்புகள் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை பெற்றுக்கொடுக்க கூடியதாக அமையும். எதிர் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுள்ளிட்ட அரசாங்கத்த தரப்புடன் மெற்கொண்ட இந்த கலந்துரையாடல் தற்போதுள்ள அரசியல் வேறுப்பாட்டுக்கு ஒரு நேர்மறையான செயற்பாடாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.