வைத்தியர் கொலை: இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் கைது!

கொட்டாஞ்சேனை – புளூமெண்டல் மாவத்தையில் உள்ள இரு மாடி வீடொன்றில் வைத்தியர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் இரு சிறுவர்கள் உட்பட மூவரை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 10 நாட்களாக இடம்பெற்ற சிறப்பு விசாரணைகளிலேயே  தெமட்டகொடை மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளைச் சேர்ந்த 16,17 மற்றும் 20 வயதுகளை உடைய இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார்.

கடந்த மே மாதம் 22 ஆம் திகதி  கொட்டாஞ்சேனை – புளூமெண்டல் மாவத்தையில் உள்ள இரு மாடி வீடொன்றிலிருந்து கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஓய்வு பெற்ற 68 வயதான தமிழ் வைத்தியர் சேவியர் ஜோசப் மெரியான் சுரேஷ் குமார் பிரிட்டோ கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே கடந்த 10 நாட்களாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர்  ஹேமந்தவின் வழி நடாத்தலில் இடம்பெற்ற விசாரணைகளில் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கொலையின் பின்னர் கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும்  கொல்லப்பட்ட வைத்தியரின் மடிக்கனினி, கையடக்கத் தொலைபேசி,  கை கடிகாரம்,  வெளிநாட்டு மதுபான போத்தல்கள் 3,  வாசனைத்திரவிய போத்தல் ஒன்று,  வைத்தியரின் பாதணி ஜோடி ஒன்று மற்றும் வைத்தியரின் பணப் பை ஆகியன  மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் பெற்றுக்கொள்ளப்பட்ட  24 மணி நேர  தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.