தமிழகத்தில் ராக்கெட் பறக்க கூடாது.. : கலங்கி போன தூத்துக்குடி.!

தூத்துக்குடி மாவட்டத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இஸ்ரோவின் ராக்கெட்களை ஏவுவதற்கு 3-வது புதிய ஏவு தளம் அமைப்பது குறித்த சாத்தியங்களை ஆராய வல்லுநர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இஸ்ரோவின் லட்சியமாக கருதப்படும் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தையும் புதிய ஏவுதளத்தில் இருந்து செயல்படுத்துவது குறித்த ஆய்வுகளையும் மேற்கண்ட வல்லுநர் குழு மேற்கொள்ளும்.

இதனால், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் நாட்டின் 3-வது ராக்கெட் ஏவுதளம் அமைக் கப்பட வாய்ப்புகள் அதிகரித் திருப்பதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நாட்டின் அனைத்து செயற்கைக் கோள்களும் தற்போது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருக்கும் இரு ராக்கெட் ஏவுதளங்களில் இருந்தே விண்ணில் செலுத்தப்படுகின்றன.

3-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் நீண்டகால கோரிக்கை. இதற்காக பொருத்தமான இடத்தை தேர்வு செய்ய சில ஆண்டுகளுக்கு முன்பே இஸ்ரோவின் விண்வெளித் துறை பேராசிரியர் நாராயணா தலைமையில் விஞ்ஞானிகள் அண்ணாமலை, அபேகுமார், கனங்கோ, சுதிர்குமார், சேஷகிரி ராவ், சோமநாத் ஆகிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அவர்கள் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட கிழக்கு கடற்கரைப் பகுதிகளை ஆய்வு செய்ததில் புவியியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியாக நாட்டி லேயே மிகச் சிறந்த இடம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் என்பது தெரிய வந்தது.

ஆனால், பல்வேறு காரணங்களால் குலசேகரப் பட்டினத்தில் 3-வது ஏவுதளம் அமைப்பது தள்ளிப்போனது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு அருகே உள்ள பெருமாள்புரம், அழகப்பபுரம்,போன்ற கிராம பகுதிகளில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அளவை பணிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிராம மக்கள் பெருமாள்புரம், அழகேச புரம்,போன்ற கிராம பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதை தடைசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ராக்கெட் ஏவுதளம் அமைத்தால் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்கள் பாதிப்படைய கூடும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.