12 வருடங்களுக்கு பிறகு மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடரில் இந்தியாவின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். இப்போது அவர் 12 வருடங்களுக்கு முன் என்ன நடைபெற்றது என்பதனை செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதுவரை நடைபெற்று முடிந்து உள்ள 11 உலகக்கோப்பை தொடர்களில் இந்தியாவிற்கு மிக மோசமாக அமைந்த தொடர், கடந்த 2007 ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி பங்குபெற்ற உலக கோப்பை தான். அந்த தொடரில் இந்திய அணி வங்கதேசம் மற்றும் இலங்கை அணியிடம் படுதோல்வியடைந்து லீக் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தது.

அந்த தோல்விக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய புயல் அடிக்க தொடங்கியது. கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்திய அணியில் மாற்றங்கள் செய்தே ஆக வேண்டும் என அனைத்து தரப்பிலிருந்தும் நெருக்கடி கொடுக்கப்பட்டது.

அப்போது மிகுந்த நெருக்கடிக்கு உள்ளான சச்சின், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என்ற முடிவை எடுத்திருக்கிறார். ஆனால் அப்போது சச்சின் சகோதரர் அவரது முடிவை ஆதரிக்கவில்லை. ஆனாலும் தனது முடிவில் உறுதியாக இருந்த சச்சின் பின்வாங்கவில்லை.

அப்போது, கிரிக்கெட் உலகில் பேட்டிங்கை மாற்றி அமைத்த பெருமை வாய்ந்த ஜாம்பவானும், மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரருமான சர் விவியன் ரிச்சர்டுசனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. சுமார் 45 நிமிடங்கள் பேசிய அவர், தற்போதுள்ள சூழ்நிலையில் ஓய்வு பெற வேண்டாம் எனவும் தொடர்ந்து விளையாடவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அவரது வேண்டுகோளை ஏற்றே எனது ஓய்வு முடிவை மாற்றி கொண்டேன் என சச்சின் தெரிவித்துள்ளார்.

2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடிய சச்சின், 2007 ஆம் ஆண்டு மூன்று போட்டிகளில் 64 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். பின்னர் 2011 ஆம் ஆண்டு சிறப்பாக விளையாடிய சச்சின் டெண்டுல்கர் இடம் பெற்றிருந்த இந்திய அணி தான் உலகக்கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று விவியன் ரிச்சர்ட்ஸ் பேசாமல் இருந்திருந்தால், சச்சினின் உலகக்கோப்பை கனவு நிறைவேறாமலே முடிவுக்கு வந்திருக்கும்.