சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பவில்லை.
கடந்த 24ஆம் நாள் தொடக்கம், நேற்று முன்தினம் ஜூன் 2ஆம் நாள் வரை கோத்தாபய ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு கொழும்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவர் மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை.
சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சைக்காக சென்றிருந்த கோத்தாபய ராஜபக்ச நாடு திரும்பவில்லை என்றும், அவருக்கு இன்னும் சில பரிசோதனைகள் தேவைப்படுவதால், வெளிநாட்டுப் பயண அனுமதியை நீடிக்குமாறும் அவரது சட்டவாளர் கோரினார்.
இதையடுத்து, ஜூன் 19ஆம் நாள் வரை கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான வெளிநாட்டுப் பயணத் தடையை தளர்த்தவும், ஜூன் 19ஆம் நாள் வரை வழக்கை ஒத்திவைக்கவும், மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.