இலங்கை அணி வீரர்களின் சிறு பிள்ளைத் தனமான ஆட்டம் காரணமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 201 ஓட்டத்துக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்துள்ளது.
12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரின் 7 ஆவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை மற்றும் குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.
இலங்கை அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய குசல் பெரேரா மற்றும் திமுத் கருணாரத்ன நல்லதொரு ஆரம்பத்தை வெளிப்படுத்தினர். இதனால் இலங்கை அணி வேகமாக ஓட்டங்களை குவித்தது.
அதன்படி முதல் 5 ஓவர்களில் 52 ஓட்டத்தையும், 10 ஓவர்களின் நிறைவில் 79 ஓட்டத்தையும் பெற்றனர். இந் நிலையில் 13.1 ஆவது ஓவரில் திமுத் கருணாரத்ன 30 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க அடுத்து வந்த லஹிரு திரிமான்னவும் சற்று நேரம் தாக்குப் பிடித்தாடினார்.
இதனால் இலங்கை அணி 15 ஓவர்களில் 100 ஓட்டங்களையும், 20 ஓவர்களில் 139 ஓட்டங்களையும் பெற்றது. இதனிடையே குசல் பெரேரா 16.4 ஆவது ஓவரில் மொத்தமாக 42 பந்துகளை எதிர்கொண்டு 7 நான்கு ஓட்டம், 16 நான்கு ஓட்டம் அடங்கலாக அரைசதம் கடந்தார்.
ஒரு கட்டத்தில் 21 ஓவர்கள் நிறைவுக்கு ஒரு விக்கெட்டை இழந்து 144 ஓட்டங்களை குவித்து இலங்கை அணி நல்ல நிலையில் இருந்தது. எனினும் 22 ஆவது ஓவருக்காக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் அணியின் மொஹமட் நபி இலங்கையின் தலை எழுத்தை மாற்றியமைத்தார்.
அதன்படி அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் அவர் லஹிரு திரிமான்னவை 25 ஓட்டத்துடன் ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றினார், அதன் பின்னர் களமிறங்கிய குசல் மெண்டீஸையும் நான்காவது பந்தில் 2 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க வைத்தார். அது மாத்திரமல்லாது தொடர்ந்து வந்த மெத்தியூஸையும் அந்த ஓவரின் இறுதிப் பந்தில் டக்கவுட் முறையில் ஆட்டமிழக்க வைத்தார் (149-5)
மேலும் 22.6 ஆவது ஓவரில் தனஞ்சய டிசில்வா டக்கவுட் முறையிலும், 25.4 ஆவது ஓவரில் திஸர பெரேரா 2 ஓட்டத்துடன் ரன்அவுட் முறையிலும், 32.2 ஆவது ஓவரில் ஆடுகளத்தில் இலங்கை அணிக்கு ஓரேயொரு ஆறுதலாகவிருந்த குசல் பெரேரா 78 ஓட்டத்துடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இலங்கை அணி 33 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 182 ஓட்டங்களை குவித்திருந்தவேளை இலங்கை நேரப்படி மாலை 5.50 மணியளவில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அடுகளத்தில் சுரங்க லக்மல் 2 ஓட்டத்துடனும், மலிங்க எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
இதன் பின்னர் மழை முடிவடைந்ததும் மாலை 8.30 மணியளவில் ஓவர்களின் எண்ணிக்கை 41 ஆக மட்டுப்படுத்தப்பட்டு போட்டி ஆர்மபானது.
எனினும் 182 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி 36.6 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 201 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணிசார்பில் மொஹமட் நபி 4 விக்கெட்டுக்களையும், ரஷித் கான் மற்றும் தாஸ்லத் ஸத்ரான் தலா 2 விக்கெட்டுக்களையும், ஹமித் ஹாசன் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இறுதியாக டக்வெத் லூவிஸ் முறைப்படி ஆப்கானிஸ்தான் அணிக்கு 41 ஓட்டங்களில் 187 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.