தனி ஒருவனாக ரோஹித் அசத்தல் சதம்!

உலக கோப்பை தொடரில் இந்திய அணி தன்னுடைய முதல் லீக் ஆட்டத்தில் இன்று, தென்ஆப்ரிக்க அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் விளையாடியது. முதல் இரண்டு விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா வீழ்த்த தொடக்க ஆட்டக்காரர்கள், ஆம்லா (6 ரன்கள்), டி காக் (10 ரன்கள்) சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

அதன் பிறகு வந்த டூ பிளஸிஸ் (38 ரன்கள்), வண்டார் டஸ்ஸன் (22 ரன்கள்), டுமினி (3 ரன்கள்), மில்லர் (31 ரன்கள்), புலுக்குவாயோ (34 ரன்கள்), மோரிஸ் (42 ரன்கள்), ரபாடா (31 ரன்கள்) நிதானமாக விளையாட தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்களை எடுத்தது.

இந்திய அணி தரப்பில் சாஹல் 4 விக்கெட்டுகளும், பும்ரா, புவனேஸ்வர் தலா 2 விக்கெட்டுகளும், குல்தீப் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள், இதன்மூலம் இந்திய அணிக்கு 228 ரன்களை தென்னாபிரிக்க அணி இலக்காக நிர்ணயித்தது.

அதனை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக தான் அமைந்தது. தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சில் அனல் பறந்தது. தென்னாபிரிக்க வீரர்கள் சில வாய்ப்புகளை வீணடிக்க, ஆனால் பயன்படுத்திக்கொள்ளாத, தவான் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த கோலியும் சொதப்ப 18 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் ரோஹித் நிதானம் குறையாமல் சில பவுண்டரி சிக்ஸர்களுடன் ரன்களை அடிக்க, ராகுல் அவருக்கு ஒத்துழைப்பு அளித்தார்.

ராகுலும் 26 ரன்களில் ஆட்டமிழக்க, அதன் பிறகு வந்த தோனி ரோஹித்துக்கு ஒத்துழைப்பை அளித்து வருகிறார். சற்றுமுன் ரோஹித் சதமடித்து அசத்தியுள்ளார். இன்னும் இந்திய வெற்றிக்கு 56 பந்துகளில் 53 ரன்களை எடுக்க வேண்டும். 7 விக்கெட் கைவசம் இருப்பதால் இந்தியா வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட ஆட்டத்தில், அனல் பறப்பது ரசிகர்களை எதிர்பார்ப்பிலே வைத்திருக்கிறது.