அனிதாவை தொடர்ந்து ரிதுஸ்ரீ: எடுத்த அதிர்ச்சி முடிவு

தமிழகத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் மருத்துவமுறை படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிபெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடும் சோதனை மற்றும் கட்டுப்பாடுகளுடன் கடந்த மாதம் 5 ஆம் திகதி நீட் தேர்வு நடைபெற்றது.

பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு பின்னர் 20 ஆம் திகதி நடைபெற்றது. நடப்பு ஆணடுக்கான மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தகுதி தேர்வை இந்தியா முழுவதும் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர்.

இதில் தமிழ் நாட்டில் மட்டும் 14 நகரங்களில் 188 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வை 1.40 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.

தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ரிதுஸ்ரீ என்ற திருப்பூர் மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தினால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு மாணவி ரிதுஸ்ரீ 490 மதிப்பெண் எடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து மருத்துவப்படிப்பு செய்வதற்கான நீட் தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் 12-ம் வகுப்பில் அதிகமதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி ரிதுஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். அனிதாவை தொடர்ந்து ரிதுஸ்ரீ தற்கொலை செய்து கொண்டது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.