அசாமில் இருந்து புறப்பட்டு விமானம் மாயமான நிலையில் விமானியின் மனைவி விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பிரிவில் பணியாற்றியது தெரியவந்துள்ளது.
அசாம் மாநிலம் ஜோர்காட் நகரின் விமானப்படை தளத்தில் இருந்து, கடந்த திங்கட்கிழமை பகல் 12.25 மணியளவில் ஏ.என்.32 ரக விமானம் அருணாசல பிரதேசத்தில் உள்ள மெஞ்சுகா விமானப்படை தளத்துக்கு புறப்பட்டது.
இதில் 8 விமானிகள் 5 பயணிகள் என 13 பேர் இருந்தனர்.
பின்னர் இந்த விமானம் சீன எல்லையில் உள்ள சியோமி மாவட்டத்தில் பகல் 1 மணியளவில் சென்றபோது திடீரென மாயமானது
இதையடுத்து விமானத்தை தேடும் பணி தொடங்கியும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் இந்த விமானத்தில் சென்றவர்களில் விமானி ஆசிஷ் தன்வார் (29) என்பவரும் ஒருவர்.
மாயமான விமானம் ஜோர்கார்ட்டில் இருந்து புறப்பட்டபோது, அந்த விமான நிலையத்தின் போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவில் அவர் மனைவி பணியாற்றினார் என தெரியவந்துள்ளது.
ஆசிஷ் தன்வாரின் சித்தப்பா சிவ் நரைன் கூறுகையில், ஆசிஷிக்கு கடந்த 2018 ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. அவர் மனைவி சந்தியா. அவரும் விமான படையில் பணியாற்றுகிறார்.
விமானம் திங்கட்கிழமை புறப்பட்டபோது, விமான போக்குவரத்து கன்ட்ரோல் ரூமில் இருந்தார் சந்தியா.
விமானம் மாயமானதை அடுத்து அவர் தான் எங்களுக்கு அந்த தகவலை கனத்த மனதோடு சொன்னார். விமானம் மலையில் எங்காவது மோதியிருக்கும் என இப்போது தகவல்கள் வந்திருப்பது கவலை அளிக்கிறது.
கடந்த மாதம் 2 ஆம் திகதி ஆசிஷூம், சந்தியாவும் வீடுமுறைக்கு வீட்டுக்கு வந்திருந்தனர். கடந்த 26ஆம் திகதி பாங்காக் சென்றுவிட்டு, அசாம் திரும்பினார்கள் என கூறியுள்ளார்.