பிலிப்பையின் அதிபர் தான் ஒரு ஓரினசேர்க்கையாளராக இருந்து குணமடைந்துவிட்டேன் என்று சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதர்தே சர்ச்சைக்கு பெயர் போனவர். இவர் பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவதும், இதனால் பல தரப்பினரின் கண்டனங்களுக்கு உள்ளாவதும் ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளார்.
அந்தவகையில், தற்போதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கலில் மாட்டி கொண்டுள்ளார். அண்மையில் ஜப்பானுக்கு அரசு முறை பயணமாக சென்றிருந்த ரோட்ரிகோ துதர்தே, அங்கு வாழும் பிலிப்பைன்ஸ் மக்களை சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார்.
அப்போது, பிலிப்பைன்சின் முக்கிய எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அண்டோனியோ டிரில்லேன்ஸ் என்பவரை அவமதிக்கும் விதமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவர் பேசியதாவது
நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். அண்டோனியோ டிரில்லேன்ஸ் குறித்து என்ன நினைக்கிறீர்கள்..?. அவர் ஒரு ஓரின சேர்க்கையாளர். சொல்லப்போனால் நானும் ஓரின சேர்க்கையாளராக இருந்து இருக்கிறேன். ஆனால் இதில் நல்ல விஷயம் என்னவென்றால் நான் தற்போது என்னை குணப்படுத்திக்கொண்டேன். என்று தெரிவித்துள்ளார்.
ரோட்ரிகோ துதர்தே தனது அரசியல் எதிரியை விமர்சித்தாலும், அது ஒரின சேர்க்கையாளர்களை நோயளி என்று குறிப்பிடுவது போன்று அமைந்துள்ளது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.