முகிலன் எங்கே இருக்கிறார் தெரியுமா? சிபிசிஐடி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

கடந்த மூன்று மாதகாலமாக தமிழகத்தில், சமுக வலைத்தளங்களில் அதிகமாக கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று காணாமல் போன சூழலியல் ஆர்வலர் முகிலன் எங்கே இருக்கிறார்? என்பது தான்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் முகிலன். இவர், கடந்த பிப்.14-ம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல பரபரப்பு தகவல்களை அளித்தார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில், கடந்த ஆண்டு மே மாதம் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது, நடைபெற்ற வன்முறையில் பொதுமக்களுக்கு தொடர்பே இல்லை என்றும், காவல்துறை உயர் அதிகாரிகள்தான் வன்முறைக்கு காரணம் என்பதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டார். ஆதாரங்களை வெளியிட்ட அவர், இதனை வெளியிடுவதால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது என பேசியிருந்தார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பின் மறுநாள் பிப்.15-ம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு ரயிலில் சென்றார் என கூறப்படுகிறது. இரவு 10.30 மணிக்கு அவருடைய நண்பர்களுடன் போனில் பேசியதாகவும், ஆனால் அதன்பின் அவரிடம் இருந்து எந்தவிதமான தகவலும் வரவில்லை என கூறப்படுகிறது. அதனால் அவர் மாயமானதாகவும், அவரை கண்டுபிடித்து தரக்கோரி தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பு சார்பில் எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் என்பவர், முகிலன் மாயமானது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை கடந்த பிப்ரவரி 18-ம் தேதி தாக்கல் செய்தார். இந்த மனு மீது நடைபெற்ற விசாரணையில், ஆட்கொணர்வு மனு குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்ட எஸ்பிக்கள் விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் காணாமல் போன முகிலன் வழக்கை, தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் இருந்து, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி கடந்த பிப்ரவரி 25-ம் தேதி உத்தரவிட்டார். சிபிசிஐடி போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில், முகிலன் ரயிலில் செல்லும் முன், அவர் வழக்கமாக செல்லும் சிலரது வீடுகளுக்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. அவர்களிடமும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தியுள்ளார்கள்.

அந்த விசாரணையின் போது, “முகிலன் உயிரோடுதான் இருக்கிறார் என்பதற்கு சில ஆதாரங்கள் இருப்பதாகவும், அவர் வட இந்தியாவில் தலைமறைவாக இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும், வருகிற 6-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது, விரைவில் அவரைக் கண்டுபிடிப்போம்” என சிபிசிஐடி போலீஸார் கூறியிருந்தார்கள்.

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், சமூக ஆர்வலர் முகிலன் மாயமான வழக்கில் துப்பு துலங்கியுள்ளதாக சிபிசிஐடி அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட கவரில் அறிக்கையை ஒப்புடைத்துள்ளது. அறிக்கையில் உள்ள தகவல்கள் வெளியானால் விசாரணை பாதிக்கும் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முகிலன் எங்கே இருக்கிறார் என துப்பு துளங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.