புதிய அறிவிப்பு..! மகிழ்ச்சியில் மாணவர்கள்.!!

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் காராப்பாடியில் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, தமிழகத்தில் இரு ஆசிரியர்கள் உள்ள 2412 பள்ளிக்கூடங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை குறைந்த மாணவர்கள் இருந்ததால், முதலமைச்சர் தலைமையில் கல்வியாளர்கள், அமைச்சர்கள் கூட்டம் நடத்தப்பட்டு கலந்து ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.

தமிழகத்தில் 412 மையங்களில் 5000 பேருக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது. தமிழகத்தில் மாணவர்கள் மத்திய அரசு தேர்வுகளை எளிதாக சந்திக்கும் வகையில் படிப்படியாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத் திட்டங்களை மாற்ற இரண்டு ஆண்டுகள் அவகாசம் தேவைப்படுகிறது.

ஆனால் தமிழகத்தில் எட்டு மாதங்களில் பாடத்திட்டத்தை மாற்றி அமைத்து சாதனை படைத்துள்ளோம். புதிய பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் அனைத்து போட்டிகளையும் எளிதாக எதிர்கொள்ள முடியும். இந்தியாவில் முதல் முறையாக கல்வி தொலைக்காட்சியை தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை தொடங்கவுள்ளது.

வருகின்ற கல்வியாண்டில் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். ஜூன் மாத இறுதிக்குள் பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகள் கணினிமயமாக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.