செய்யப்பட்டிருந்த வைத்தியர் சேவியல் ஜோசப் நெரில் சுரேஸ்குமார் பிரிட்டோவின் முகத்தில் விசிறப்பட்டிருந்த மிளக்காய்த்தூள் அடைபட்டு, மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார் என்று, மரண விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, கொழும்புக் குற்றத்தடுப்புப் பிரிவினர், கடந்த 04ம் திகதி நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
கொழும்பு – கொட்டாஞ்சேனை, புளூமெண்டல் மாவத்தையிலுள்ள வீடொன்றில் வைத்து கொலை செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியரான சேவியல் ஜோசப் நெரில் சுரேஸ்குமார் பிரிட்டோவுக்கும் கொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கியுள்ள முதலாவது சந்தேகநபரான தெமட்டகொடையைச் சேர்ந்த ரமேஷ் ராஜ் மகேந்திரன் என்பவருக்கும் இடையில், நீண்ட காலம் பழக்கம் இருந்ததாக, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர், கொழும்பு மேலதிக நீதவான் பண்டார நெலும்தெனியவிடம், கடந்த 04ம் திகதி தெரிவித்தனர்.
அத்துடன், 3 சிறுவர்களிடம் இருந்து 26 பொருள்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவித்த கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர், அதனை மன்றில் நேற்று (நேற்று முன்தினம்) சமர்ப்பித்தாகவும் சுட்டிக்காட்டினர்.
ஓய்வுபெற்ற வைத்தியரின் படுகொலை தொடர்பான வழக்கு, நேற்றைய தினம் (04), கொழும்பு மேலதிக நீதவான் பண்டார நெலும்தெனிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சந்தேகநபர்களை ஆஜர்படுத்தி மன்றிலுரைத்த போதே, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர், மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இலக்கம் – 30, புளூமண்டல் மாவத்தை, கொட்டாஞ்சேனை, கொழும்பு – 13 எனும் விலாசத்தைக்கொண்ட இரு மாடி வீட்டிலிருந்து, சேவியல் ஜோசப் நெரில் சுரேஸ் குமார் பிரிட்டோ (வயது 68) என்ற ஓய்வுபெற்ற வைத்தியரின் சடலம், மே 23ஆம் திகதியன்று மீட்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை செய்த கொழும்புக் குற்றத்தடுப்புப் பிரிவினர், சம்பவம் இடம்பெற்று 10 நாள்களுக்குப் பின்னர், 19 வயது சிறுவனான தெமட்டகொடையைச் சேர்ந்த ரமேஷ் ராஜ் மகேந்திரன் என்பரைக் கைதுசெய்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைகளுக்கமைய, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 15, 17 வயதுடைய மேலுமிரு சிறுவர்களை, நேற்று முன்தினம் (03) கைதுசெய்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 3 சிறுவர்களும், கொழும்பு மேலதிக நீதவான் பண்டார நெலும்தெனிய முன்னிலையில், நேற்று முன்தினம் (03) ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது மூடிய அறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில், நேற்றைய தினமும் (04) இவர்கள் மூவரும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதற்கமைய, நேற்றைய தினமும் இந்தச் சந்தேகநபர்கள் மூவரும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. சந்தேகநபர்கள் சார்பில், சட்டத்தரணி பிரயந்த சமரநாயக்க ஆஜராகியிருந்தார்.
சந்தேகநபர்கள் தொடர்பான விவரம்:
சந்தேகநபர்களை முற்படுத்தி தமது தரப்புக் கருத்துகளை முன்வைத்த கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர், இச்சம்பவம் தொடர்பில், தெமட்டகொட – சியபத்துஉயன வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் ராஜ் மகேந்திரன் (வயது 19), கொட்டாஞ்சேனை – ஸ்ரீ குணாநந்த மாவத்தையைச் சேர்ந்த 15, 17 வயதுடைய இருவர் உள்ளிட்ட மூவரையும் கைதுசெய்துள்ளதாகவும் இந்த மூவரும், கொழும்பில் உள்ள பிரபல சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்ற, கல்வி பயில்கி ன்றவர்களெனவும் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தின் முதலாவது சந்தேகநபரான ரமேஷ் ராஜ் மகேந்திரன் (வயது 19) என்ற சிறுவனே, படுகொலையின் பிரதான சந்தேகநபரெனத் தெரிவித்த கொழும்புக் குற்றத்தடுப்புப் பிரிவினர், இவர், கார்களை வாடகைக்கு விடும் தொழிலைச் செய்து வருபவரெனவும் கூறினர்.
இந்த முதலாவது சந்தேகநபரான மகேந்திரன், தெமட்டகொடையை வசிப்பிடமாகக் கொண்டவரெனவும் அவர் தனது கல்வியை நிறைவு செய்ததன் பின்னர், தந்தையிடம் காரொன்றை வாங்கிக்கொண்டு, அதை வாடகைக்கு வழங்கி வந்துள்ளாரென்றும், சிறிது காலத்தின் பின்னர், மகேந்திரனுக்கு மேலும் 3 கார்களை தந்தை வாங்கிக் கொடுத்த நிலையில், அவற்றையும் அவர் வாடகைக்கு வழங்கியுள்ளதாகவும், விசாரணைகளில் தெரியவந்ததாக, குற்றத்தடுப்புப் பிரிவினர் கூறினர்.
“நான்கு கார்களையும் வாடகைக்குக் கொடுத்து வந்த மகேந்திரன், சிறிது காலத்தின் பின்னர், தான் முன்னெடுத்து வந்த தொழிலில் நட்டமடைந்துள்ளார். அந்த நட்டத்தில் இருந்து மீண்டெழும் முகமாக, ஊரவர், அயலவர்கள், நண்பர்களெனப் பலரிடமிருந்து, சுமார் 40 இலட்சம் ரூபாயைக் கடனாகப் பெற்றுள்ளார்.
“இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், தெமட்டகொடையில் இருந்து தலைமறைவாகி, கொட்டாஞ்சேனையில் வாடகைக்கு வீடொன்றைப் பெற்று அதில் வசித்து வந்தார். அத்துடன், தான் செய்துவந்த அதே கார் வாடகைக்குக் கொடுக்கும் தொழிலையும் முன்னெடுத்து வந்தார்.
“இந்நிலையிலேயே, ஓய்வுபெற்ற வைத்தியரான சேவியல் ஜோசப் நெரில் சுரேஸ் குமார் பிரிட்டோவுக்கும் முதலாவது சந்தேகநபரான மகேந்திரனுக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது முதல், வைத்தியர் தனது வெளி வேலைகளுக்காக, மகேந்திரனிடம் இருந்து வாடகைக் காரைப் பெற்றுள்ளார். நாளடைவில், இவ்விருவருக்கும் இடையிலான பழக்கம் நெருக்கமாகியுள்ளது என, மகேந்திரனிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தின் போது தெரியவந்தது” எனவும், கொழும்புக் குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
அத்துடன், இந்தச் சந்தர்ப்பத்திலேயே, 2ஆவது, 3ஆவது சந்தேகநபர்களான 15, 17 வயதுச் சிறுவர்களுக்கும் முதலாவது சந்தேகநபரான மகேந்திரனுக்கும் இடையில் அறிமுகம் கிடைத்து, அவர்கள் மூவரும் நண்பர்களாகியுள்ளனர் என்றும், குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
கொலை இடம்பெற்ற நாள்:
“கொலை இடம்பெற்ற (மே 22) தினத்துக்கு முன்தினமான மே 21ஆம் திகதியன்று, தனிப்பட்ட ரீதியிலான பணி நிமித்தம், முதலாவது சந்தேகநபரான மகேந்திரனிடமிருந்து, மேற்படி வைத்தியர், காரொன்றை வாடகைக்குப் பெற்றுள்ளார். இதன்போது அந்தக் காரை, மகேந்திரனே செலுத்தியும் சென்றுள்ளார்.
“இதன்போது, தான் தனிமையிலேயே வசித்து வருவதாகவும் தன்னிடம் 10 இலட்சம் ரூபாய் பணம் உள்ளதாகவும் தெரிவித்துள்ள வைத்தியர், அதைக் கொண்டு காரொன்றை வாங்க வேண்டுமென, மகேந்திரனிடம் தெரிவித்துள்ளார்.
“இதைக் கேட்ட மகேந்திரன், 10 இலட்சத்தைக் கொண்டு சிறந்த காரொன்றை வாங்கலாமெனத் தெரிவித்துவிட்டு, குறித்த வைத்தியரை அவரது பணிகள் அனைத்தும் முடிந்ததன் பின்னர், அவருடைய வீட்டில் கொண்டுவந்து விட்டுச் சென்றுள்ளார்.
“தனது வாடகை வீட்டுக்கு வந்த மகேந்திரன், தனது இரு நண்பர்களான 2ஆவது, 3ஆவது சந்தேகநபர்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி, குறித்த வைத்தியரிடம் 10 இலட்சம் ரூபாய் இருப்பதாகவும் அதைக் கொள்ளையடிக்கப் போவதாகவும், அதற்கு அவர்களது உதவியையும் கோரியுள்ளார். அதற்கு, 2ஆவது, 3ஆவது சந்தேகநபர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்” என, குற்றத்தடுப்புப் பிரிவினர் மன்றில் கூறினர்.
“இதையடுத்து, அன்றைய தினம் இரவு, குறித்த வைத்தியருக்கு அழைப்பை ஏற்படுத்திய 1ஆவது சந்தேகநபரான மகேந்திரன், தனது நண்பர் ஒருவர் சுகயீனமாக உள்ளதாகவும் அவருக்கு சிகிச்சையளிக்க வேண்டுமெனவும், அதற்கான நேரமொன்றை ஒதுக்கித் தருமாறும் கோரியுள்ளார். இதற்கு, இன்று (மே 21) முடியாதெனவும் நாளை (மே 22) இரவு வருமாறும், குறித்த வைத்தியர் தெரிவித்துள்ளார்.
“வைத்தியர் குறிப்பிட்டது போல், மே 22ஆம் திகதி இரவு, வைத்தியரின் வீட்டுக்குச் சென்ற 3 சந்தேகநபர்களும், வைத்தியரின் வீட்டுக் கதவைத் தட்டியுள்ளனர். இந்நிலையில், வீட்டுக் கதவைத் திறந்த வைத்தியரின் தலையில், 1ஆவது சந்தேகநபரான மகேந்திரன், கட்டையொன்றால் தாக்கியுள்ளார். அதையடுத்து, 2ஆவது, 3ஆவது சந்தேகநபர்கள், மிளகாய்த் தூளை, வைத்தியரின் முகத்தில் விசிறியுள்ளனர்.
“இதனால் நிலைதடுமாறிய வைத்தியரைத் தள்ளிவிட்டு, கதவையும் பூட்டிய சந்தேகநபர்கள், அவரது கழுத்தை நெரித்து, கைகளையும் கால்களையும், வாயையும் கட்டியுள்ளனர். பின்னர், வைத்தியர் வைத்திருப்பதாகக் கூறிய 10 இலட்சம் ரூபாயைத் தேடி, வீடு முழுவதிலும் அவர்கள் சோதனை நடத்தியுள்ளனர். இருப்பினும், அவர்கள் தேடிய அந்தப் பணம், அந்த வீட்டுக்குள் இருக்கவில்லை.
“அதன்பின்னர், வைத்தியர் பயன்படுத்திய அப்பிள் மடிகணினி, அலைபேசி, கைக்கடிகாரம் என்பவற்றைக் கொள்ளையடித்துள்ள சந்தேகநபர்கள், அங்கிருந்த விலையுயர்ந்த 2 சப்பாத்துகளையும் வாசனைத் திரவியப் போத்தல் ஒன்றையும், வைத்தியரின் பணப்பையையும் மேலும் சில பொருள்களையும் கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
“மறுநாள் (23) காலை, வைத்தியரின் வீட்டு வேலைகளுக்காக வழமையாக வரும் பணிப்பெண், வீட்டுக்குள் வைத்தியரின் சடலத்தைக் கண்டு, அது தொடர்பில், கொட்டஞ்சேனை பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
மரண விசாரணை:
“குறித்த வைத்தியர் தொடர்பான மரண விசாரணை அறிக்கையில், அவரது முகத்தில் விசிறப்பட்ட மிளகாய்த்தூள் அடைபட்டு, மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையிலேயே மரணம் சம்பவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது” எனவும், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர், மன்றில் தெரிவித்தனர்.
விசாரணைகள் முன்னெடுப்பு
“இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கொட்டாஞ்சேனை பொலிஸார் தமக்குப் பொறுப்புக் கொடுத்தனர். இதற்கமைய, விசாரணைகளை முன்னெடுத்த நாம், 10 நாள்களின் பின்னர், குறித்த வைத்தியரின் அலைபேசி அழைப்பு விவரங்களைக் கொண்டு, 1ஆவது சந்தேகநபரான மகேந்திரனைக் கைதுசெய்வதற்காக, தெமட்டகொடைக்குச் சென்றோம். இதன்போது, சந்தேகநபரின் பெற்றோர், சந்தேகநபர் கடன் காரணமாக தலைமறை வாகியுள்ளதாகக் கூறினர்.
“இதையடுத்து, தேடுதல் வேட்டையை முன்னெடுத்த நாம், ஜூன் 1ஆம் திகதியன்று, கொட்டா ஞ்சேனையில் வைத்து அவரைக் கைதுசெய்தோம். இவ்வாறு கைது செய்யப்பட்டவரைத் தடுத்து வைத்து விசாரணை செய்தபோதே, மேற்குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தையும் வாக்குமூலமாகக் கொடுத்தார்.
“அத்துடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைகளின் அடிப்படையில், 2ஆவது, 3ஆவது சந்தேகநபர்களை கைதுசெய்தோம்” எனத் தெரிவித்தனர்.
கொள்ளையடித்த பொருள்களில், 1ஆவது சந்தேகநபர், அப்பிள் கைக்கடிகாரத்தை 13 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளதுடன், மடிகணினியை திருத்துவதற்காக கடையொன்றில் கொடுத்துவைத்துள்ள அதேவேளை, அலைபேசியைத் தனது பாவனைக்கு எடுத்துக்கொண்டுள்ளதாகவும், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் மன்றில் கூறினர்.
“அத்துடன், விலையுயர்ந்த 2 சப்பாத்துகளையும் வாசனைத்திரவியப் போத்தலையும், 3ஆவது சந்தேகநபரான 15 வயதுச் சிறுவனிடம், 1ஆவது சந்தேகநபர் (மகேந்திரன்) வழங்கியுள்ளார். “2ஆவது சந்தேக நபரான 17 வயதுச் சிறுவனிடத்தில், எந்தப் பொருளும் கொடுக்கப்படவில்லை” என்று, கொழும்புக் குற்றத்தடுப்புப் பிரிவினர் கூறினர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பிலான தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கூறினர்.
அத்துடன், நேற்று முன்தினம் திங்கட்கிழமையன்று, சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 26 பொருள்களையும் மன்றில் சமர்ப்பித்ததாகவும் மேலும், கொலைச் சம்பவம் இடம்பெற்ற தினத்தில் சந்தேகநபர்கள் அணிந்திருந்த ஆடைகளும் மன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கூறினர்.
இதையடுத்து, சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, 2ஆவது சந்தேகநபரான 17 வயதுச் சிறுவன், ஜூன் 10, 11ஆம் திகதிகளில் பரீட்சை ஒன்றுக்குத் தோற்றவிருப்பதால், அதற்கான அனுமதியைப் பெற்றுத் தருமாறு, மன்றில் கோரினார்.
வழக்கை ஆராய்ந்த மேலதிக நீதவான், இது குறித்து அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறும், அது தொடர்பில் தான் ஆராய்வதாகவும் கூறினார்.
அத்துடன், 3ஆவது சந்தேகநபரான 15 வயதுச் சிறுவனை, மாகொல சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்ட மேலதிக நீதவான், ஏனைய இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டதோடு, இந்த வழக்கு விசாரணையை, ஜூன் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.