21 வயதில் 196 நாடுகள் பயணம்! சாதனை படைத்த இளம்பெண்

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உலக நாடுகளை சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் லெக்ஸி அல்போர்ஃடு. இவரது தந்தை Travels நிறுவனம் வைத்திருக்கிறார். சிறுவயது முதலே உலக நாடுகளை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் லெக்ஸிக்கு இருந்துள்ளது.

இதற்கு காரணம், பள்ளி விடுமுறை நாட்களில் பெற்றோர் இவரை பல்வேறு நாடுகளுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். 196 நாடுகளையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று எண்ணிய லெக்ஸியின் கனவு, கடந்த மே 31ஆம் திகதி நிறைவேறியது.

196வது நாடாக வடகொரியாவை மே 31ஆம் திகதி லெக்ஸி சுற்றிப் பார்த்துவிட்டார். அப்போது அவருக்கு அங்கு ‘இளம் வயதிலேயே அனைத்து நாடுகளையும் சுற்றி வந்தவர்’ என்னும் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இதனை லெக்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய சாதனை குறித்து அவர் கூறுகையில், ‘உலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியதில் என் பெற்றோர்கள் பங்கு மிக முக்கியமானது. மனிதர்களின் வாழ்க்கை எவ்வளவு அழகானது.

அவர்கள் அந்த வாழ்க்கையை எப்படியெல்லாம் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள எனக்கு ஆர்வமாக இருக்கும். பயணத்துக்காக அதிக அளவில் செலவு பண்ணத் தேவையில்லை. நான் ஆடம்பரமான இடங்களை பயணத்தின்போது தேட மாட்டேன். இருக்கிற இடத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள நினைப்பேன்.

அதே மாதிரி பெரும்பாலும் Plan செய்து எந்த இடங்களுக்கும் நான் போனதில்லை. ஆனால், போகின்ற இடங்களில் எல்லாம் ஒவ்வொரு விதமான புதுப்புது அனுபவங்களைத் தெரிந்துகொள்வேன். முன்னாடியே Plan செய்து சலுகை இருக்கும் போது பார்த்து விமானத்திற்கு முன்பதிவு செய்வேன்.

அதேபோன்று என் பெற்றோர்களிடம் அதிக அளவில் பணம் கேட்டு தொந்தரவு செய்ய மாட்டேன். தேவையில்லாத பொருள்களை வாங்கி பணத்தை வீணடிக்கவும் மாட்டேன். கிடைக்கும் பணத்தை எல்லாம் சேமித்து பயணத்துக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்வேன். I Love Travel!’ என தெரிவித்துள்ளார்.