தென்னாப்பிரிக்கப் பெண்களில் 40 சதவிகிதம் பேர் வன்புணர்வுக்குள்ளாக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் கூறும் நிலையில் பெண் மருத்துவர் ஒருவர் மயிரிழையில் தப்பியிருக்கிறார்.
நோயாளி போல் நடித்து மருத்துவமனைக்குள் புகுந்த ஒரு நபர், தூங்கிக் கொண்டிருந்த பெண் மருத்துவர் ஒருவரை வன்புணர்வு செய்ய முயன்றிருக்கிறார்.
அந்த பெண் மருத்துவரோ அந்த நபருடன் போராடியதோடு, தன்னை முத்தமிட முயன்ற அந்த நபரின் நாக்கை பலமாக கடித்திருக்கிறார்.
அவர் கடித்த வேகத்தில், அந்த நபரின் நாக்கே துண்டாகி விட்டிருக்கிறது. நாக்கின் ஒரு துண்டை இழந்த அந்த நபர், இரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவமனையிலிருந்து தப்பியோட, அந்த மருத்துவர் பொலிசாருக்கு தகவல் அளித்திருகிறார்.
உடனடியாக பொலிசார் அந்த வட்டாரத்திலிருந்த மருத்துவமனைகளுக்கு செய்தி அனுப்பி, நாக்கில் காயத்துடன் யாராவது வந்தால் தங்களுக்கு தகவல் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
அதேபோல் ஒரு மருத்துவமனையிலிருந்து தகவல் கிடைக்க, அங்கு விரைந்து சென்ற பொலிசார் அந்த 32 வயது நபரை கைது செய்தனர்.
மருத்துவமனை ஒன்றிற்கு அறுவை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ள அந்த நபர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்.
தென்னாப்பிரிக்காவின் குற்றச்செயல்கள் குறைந்து வந்தாலும், வன்புணர்வுக் குற்றங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
4,000 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், மூன்றில் ஒரு பெண், தான் கடந்த ஆண்டு வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஆண்களிடம் இது குறித்து கேட்டபோது, நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் தாங்கள் யாராவது ஒரு பெண்ணையாவது வன்புணர்வு செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்.
அவர்களில் பாதிப்பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை வன்புணர்வு செய்ததை ஒப்புக் கொண்டனர்.