நான்கு மணித்தியாலங்கள் மோடி இலங்கையில்….

இலங்கைக்கு வருகை தரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நான்கு மணித்தியாலங்களுக்குள் இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு இங்கிருந்து புறப்படுகின்றார் என இராஜதந்திரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது முறையாகவும் பதவியேற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அயல்நாடுகளுக்கான பயணங்களை ஆரம்பித்திருக்கிறார். நாளை மாலைதீவுக்கான பயணத்தை மேற்கொள்ளும் அவர், நாளை மறுநாள் ஞாயிற்றுக் கிழமை மாலைதீவிலிருந்து முற்பகல் 11 கொழும்பு வருகிறார்.

கொழும்புவரும் அவருக்கு ஜனாதிபதி செயலகத்தில் வரவேற்பு அளிக்கப்படும். அதனையடுத்து, இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன.

இருதரப்பு பேச்சுக்களை அடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரையும், இந்தியப் பிரதமர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

இந்தப் பேச்சுக்களை முடித்துக் கொண்டு, 3 மணியளவில், இலங்கையிலிருந்து புறப்படுகிறார். இதேவேளை, ஆந்திர மாநிலத்தில் உள்ள ரேனிகுண்டா விமான நிலையத்துக்கு நாளை மறுநாள் மாலை 4.30 மணியளவில் இந்தியப் பிரதமர் சென்றடைவார்.

அங்கிருந்து, பிற்பகல் 5 மணியளவில் திருப்பதிக்கு புறப்படும், இந்தியப் பிரதமர், மாலை 6 மணியளவில், திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.