இளவரசன் மரணம், தற்கொலையா? கொலையா?

கடந்த 2012 இறுதி முதல் 2013 வரை தமிழகத்தில் அனைத்து அரசியல்வாதிகளாலும், பேசப்பட்ட ஒரு சம்பவம் தருமபுரி இளவரசன், திவ்யா காதல், கல்யாணம், பிரிவு, தற்கொலை சம்பவம் தான். அப்போது ஆரம்பித்தது இன்னும் முடிவுக்கு வரவில்லை.

மனைவி திவ்யா பிரிந்த காரணத்தால், மனமுடைந்த இளவரசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக சிபிசிஐடி போலீசார் உயர்நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க, உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. ஆனாலும் வழக்கு இன்னும் நிலுவையில் தான் இருக்கிறது.

தலித் பிரிவை சேர்ந்த இளவரசனுக்கும், வன்னியர் பிரிவைச் சேர்ந்த திவ்யாவுக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள். திவ்யா இளவரசனுடன் செல்ல முடிவெடுக்க, மனமுடைந்த திவ்யா தந்தை நாகராஜ் தற்கொலை செய்துகொண்டார்.

இதனையடுத்து கட்சிகள் பாகுபாடின்றி இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. அது முதல் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இதற்கிடையே உடல்நிலை சரியில்லாத திவ்யா அம்மாவை பார்க்க, திவ்யா சில மாதங்கள் கழித்து வந்த நிலையில், பின்னர் இளவரசன் வீட்டுக்கு திரும்ப மறுத்துவிட்டார். நீதிமன்றத்திலும் இளவரசன் உடன் செல்ல திவ்யா மறுத்துவிட்டார். திவ்யா உயர்நீதிமன்றத்தில் கொடுத்த இறுதி வாக்குமூலத்தில் தான், தன் தாயுடனேயே வாழ விரும்புவதாகத் தெரிவித்தார்.

இதற்கு அடுத்த நாளே, இளவரசன் தர்மபுரி அரசு கலைக்கல்லூரிக்கு பின் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். அவருடைய சடலத்திற்கு அருகே மதுபாட்டில்கள் இருந்தன.

இளவரசன் மரணத்தை தொடர்ந்து இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. பிரேத பரிசோதனையில் தலையில் அடிபட்டு அவர் இறந்ததாக சோதனை முடிவு வெளியானது. இளவரசன் தான் அணிந்திருந்த உடையில் வைத்திருந்த 4 பக்க கடிதத்தில் தன் மரணத்திற்கு மற்றவர்கள் யாருமே காரணமில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்த கடிதத்தை இளவரசனின் உறவினர்களிடம் இருந்து கைப்பற்றிய காவல் துறையினர், இந்த கடிதத்தை எழுதியது இளவரசன் தானா? என்ற சோதனையை மேற்கொள்வதற்கு., தடவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்த நிலையில்., இந்த கடிதத்தில் உள்ள எழுத்துக்கள் அனைத்தையும் எழுதியது, இளவரசன் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நேரத்தில், இளவரசனின் இறப்பிற்கு பின்னர் அவரது மரணம் தொடர்பாக, பல வழக்குகள் சென்னையில் இருக்கும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இளவரசனின் உடற்கூறு சோதனையானது கோயம்புத்தூரில் உள்ள மருத்துவமனை அல்லது சென்னையில் உள்ள மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மனுதாக்கல் செயப்பட்டது.

இது குறித்த வழக்குப்பதிவை ஏற்ற நீதிபதிகள் பிரேத பறிசோதனைகளை வீடியோ ஆதாரத்துடன் பதிவு செய்யவும், அதனையே இளவரசனின் தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இளவரசனின் உடலை பாதுகாத்து வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து இளவரசனின் மரணத்தில் மீண்டும் சந்தேகம் இருப்பதாக கூறி வழக்கு தொடுத்திருந்த நிலையில்., சென்னை போரூரில் இருக்கும் இராமச்சந்திரா மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறிய நிலையில், இதனை ஏற்ற நீதிபதிகள் இராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர்களான சம்பத்குமார் மற்றும் தங்கராஜ் ஆகியோர் தருமபுரிக்கு சென்று பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டனர்.

இவர்கள் இருவரும், பிரேத பரிசோதனை செய்த மருத்துவ முடிவுகள் முரண்பாடாக இருப்பதாக கூறி, இளவரசனின் உடலை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்து, பிரேத பரிசோதனை நடத்திய பின்னர், உடற்கூறாய்வு முடிவுகளானது இளவரசனின் பெற்றோர்களிடம் வழங்கப்பட்டது.

இந்த சமயத்தில்., இளவரசனின் இறப்பு காரணத்தை கண்டறிய நீதிபதிகள் தலைமையில் நீதி விசாரணையானது நடத்தப்பட வேண்டும் என்று விசிக கட்சியின் சார்பில் கோரிக்கையானது வைக்கப்பட்டது. இதே கோரிக்கையை அன்றைய திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பிற கட்சியினர் வைத்தனர்.

இதனையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதியான சிங்காரவேலன் தலைமையில் தமிழக அரசு சார்பில் ஆணையம் அமைக்கப்பட்டது. சிங்காரவேலுவின் தலைமையில் நீதி விசாரணை நடத்த கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று இளவரசனின் தந்தையான இளங்கோ வழக்கு தொடுத்த நிலையில்., இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

இதற்கு பின்னர் இந்த வழக்கை விசாரணை செய்த சிபிசிஐடி போலீசார், இளவரசனுக்கு மரணம் ஏற்பட காரணம், உடற்கூறாய்வு அறிக்கை, மரண குறிப்பு போன்றவற்றை அடிப்படியாக வைத்து, இளவரசன் கொலை செய்யப்படவில்லை, அவர் தற்கொலை தான் செய்து கொண்டார் என்ற அறிக்கையை தெரிவித்தனர். உயர்நீதிமன்றமும் அதையே தீர்ப்பாக வழங்கியது. ஆனாலும் வழக்கு முடிவடையாமல் தொடர்ந்தது.

இதன்பின்னர், சம்பவம் நடைபெற்ற போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அமைத்த சிங்காரவேலன் விசாரணை ஆணையம், 5 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை அளித்துள்ளதாகவும், ஆனால் இந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் தகவல் சில ஆங்கில ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

சிங்காரவேலன் ஆணயம் இந்த மரணம் தற்கொலையே என அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில், இளவரசனின் இரு வேறு பிரேத பரிசோதனை அறிக்கைகளின் அடிப்படையிலும், சிபிசிஐடி போலீசார் விசாரணையிலும் தற்கொலையே என்று முடிவு செய்யப்பட்டது. அதேபோல இளவரசன் வாட்ச் இயங்காமல் காட்டிக்கொண்டிருந்த நேரமான 1.20 மணிக்கு சரியாக குர்லா எக்ஸ்பிரஸ் கடந்து சென்றதும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திவ்யா பிரிவால் மனமுடைந்து இளவரசன் தற்கொலை செய்து கொண்டார் என சிங்காரவேலன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இளவரசன் கொலை செய்யப்பட்டார் என அவருக்காக குரல் கொடுத்த இயக்கவாதிகளும், அமைப்பு நடத்துபவர்களும் என்ன பதில் கொடுப்பார்கள் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.