ஜீரண சக்தியை அதிகரித்து பசியை தூண்டும் வெந்தயக்கீரை சாதம்!

வெந்தயக்கீரை ஜீரண சக்தியை அதிகரித்து பசியை தூண்டுகிறது. சிறுநீர் உறுப்புகளை சுத்தம் செய்கிறது.

அதுமட்டுமின்றி வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம்.

அந்தவகையில் வெந்தயக்கீரையில் செய்யப்படும் ஆரோக்கியமான சாதத்தினை எப்படி தயாரிப்பது என்பது பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • பச்சரிசி – 1 கப்,
  • வெந்தயக்கீரை – 1 கட்டு,
  • தக்காளி – 1,
  • வெங்காயம் – 1,
  • இஞ்சி – 1 துண்டு,
  • பூண்டு – 5 பல்,
  • பச்சை மிளகாய் – 3,
  • மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் – தலா அரை டீஸ்பூன்,
  • சீரகத்தூள், தனியாத்தூள், கரம் மசாலா – தலா 1 டீஸ்பூன்,
  • தேங்காய்ப்பால் – ஒரு கப்,
  • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
  • உப்பு – தேவைக்கு.
செய்முறை

வெந்தயக்கீரையில் இலையை மட்டும் ஆய்ந்து நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இஞ்சி, பூண்டு, மிளகாயை நசுக்கி கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நசுக்கி வைத்த பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயை போட்டு வதக்குங்கள்.

பிறகு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் கீரையை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், தனியாத்தூள், கரம் மசாலா சேர்த்து வதக்குங்கள்.

பச்சை வாடை போனதும், இந்தக் கலவையோடு தேங்காய்ப்பால், நான்கு கப் தண்ணீர், தேவையான உப்பு, அரிசி ஆகியவற்றைச் சேர்த்து வேக வையுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி, இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள். வெந்தயக்கீரை சாதம் தயார்.