பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென், தனது மூத்த மகள் ரினீக்கு அதிர்ச்சி அளிக்கும் விடயத்தை தெரிவித்துள்ளார்.
பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென். தற்போது 43 வயதாகும் இவர் திருமணம் செய்துகொள்ளாமல், ரினீ மற்றும் அலிஷா என்ற இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
கடந்த 2000ஆம் ஆண்டு ரினீயையும், 2010ஆம் ஆண்டு அலிஷாவையும் தத்தெடுத்தார். இதற்கிடையில், தன்னை விட இளையவரான ரொஹ்மான் ஷால்(28) என்பவரை காதலித்து வருகிறார்.
தற்போது 18 வயதை எட்டிய ரினீ, சமீபத்தில் நடந்த தேர்தலில் தனது தாயுடன் சேர்ந்து வாக்களித்தார். முன்னதாக, சுஷ்மிதா தனது மூத்த மகளான ரினீயிடம் அவரின் பிறப்பு குறித்த உண்மையை தெரிவிக்க முடிவு செய்தார்.
அதன்படி, தத்தெடுக்கப்பட்டதை ரினீயிடம் அவர் கூறியுள்ளார். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரினீ, நான் உங்கள் மகள் இல்லையா என்று கேட்டதற்கு, நீ அன்பால் பிறந்தவள், சிறப்பானவள் என்று சுஷ்மிதா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேட்டியளித்த சுஷ்மிதா சென் கூறுகையில், ‘என் மகள்களுக்கு 18 வயதான பிறகு அவர்களின் உண்மையான பெற்றோர்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். ரினீக்கு 16 வயது இருக்கும்போது நீதிமன்றத்திற்கு சென்று, அவரின் பெற்றோர் யார் என்பதை தெரிந்துகொள் என்று கூறினேன்.
நிஜ பெற்றோர் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளும் உரிமை ரினீக்கு உண்டு. திடீர் என்று என் நிஜ பெற்றோரை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் கூறவில்லை, ஆனால் தெரிந்து கொள்ளும் உரிமை உள்ளது என்கிறேன் என்று ரினீயிடம் கூறினேன்.
அதற்கு அவரோ இல்லாமா, நான் எதையும் தெரிந்துகொள்ள விரும்பவில்லை என்றார். என் பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள். அதனால் மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்து கதை கேட்டுக் கொண்டிருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.