சென்னையில் வசிக்கும் பெண் மருத்துவர் தனது வீட்டில் அமைத்திருக்கும் மாடித்தோட்டம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த தோட்டத்தின் வளரும் காலிபிளவர், பீர்க்கண், புடலை, கொய்யா போன்றவை ஒருபுறம் மலைக்கவைத்தால், மறுபுறம் அவைகளை வளர்த்து பராமரிக்கும் தமிழ்மணியும் வியக்கவைக்கும் அளவுக்கு வாழ்க்கை பின்னணியை கொண்டவராக இருக்கிறார்.
தமிழ்மணி, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இயங்கும் ரத்த வங்கியின் மருத்துவர்.
அவர் தன்னை மருத்துவர் என்று அறிமுகம் செய்துகொள்ளாவிட்டால், மொடலிங் துறையிலா இருக்கிறீர்கள் என்று கேட்டுவிடுவார்கள்.
அவ்வளவு ஸ்டைலாக தோன்றுகிறார். அதிக அலங்காரம் செய்துகொள்ளாவிட்டாலும் உச்சி முதல் பாதம் வரை நேர்த்தியான அழகுணர்ச்சியை வெளிப்படுத்துகிறார்.
தமிழ்மணி கூறுகையில், மருத்துவர் வேலை என்றாலே பரபரப்பு. அதிலும் என் கணவரும் மருத்துவர் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
கூடவே எனக்கு டீன்ஏஜ் பருவத்தில் இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள். இத்தனைக்கும் மத்தியில் நான் பரபரப்பே இல்லாமல் எப்போதும் சிரித்த முகத்தோடு இருந்துகொண்டிருக்கிறேன் என்றால், அதற்கு எனது மாடித்தோட்டம் தான் காரணம்.
மாடித்தோட்டத்தை பராமரிப்பதால் எனது மனதுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. தினமும் காலையில் ஒரு மணி நேரத்தை தோட்டத்தில் செலவிடுகிறேன். ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேரத்தையும் இந்த செடிகொடிகளோடு செலவிடுவதன் மூலம் அடுத்து ஒருவாரம் மருத்துவ சேவைக்கு தேவைப்படும் புத்துணர்ச்சியை இங்கே என்னால் பெற முடிகிறது என கூறுகிறார்.