சிங்களவர்களை போன்று முஸ்லிம் மக்களும் கலவரமடைந்துள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அரச பத்திரியையொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அடிப்படைவாதத்திற்கு நாட்டின் அனைத்து முஸ்லிம் சமூகமும் பொறுப்பு கூற வேண்டுமா? என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு அவர் பதிலளிக்கையில்,
இந்த மிலேச்சத்தனமான பயங்கரவாதம் குறித்து, நாட்டின் எல்லா இடங்களிலும் வாழும் சம்பிரதாய முஸ்லிம் மக்கள் அறியமாட்டார்களென என்னால் உறுதி கூற முடியும்.
உண்மையில் வஹாப் வாதம், இல்ஹாம் முஸ்லிம் என்றால் என்னவென்று அறியாத மக்களும் உள்ளார்கள். நாம் இங்கு வெளி கொணரும் விடயங்களால் சிங்கள மக்களைப் போன்று முஸ்லிம் மக்களும் கலவரமடைந்துள்ளார்கள்.
தேரரே, நீங்கள் சொல்வது என்ன என்று கேட்கிறார்கள். எமது மனதில் இல்லாத, நாம் ஒருபோதும் நினைக்காதவைகளையே நீங்கள் கூறுகின்றீர்கள் என்கிறார்கள்.
சிங்கள சமூகத்தவர்கள் இவை உண்மையா? என்ற சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். அவர்கள் வஹாப் வாதம், சலபி வாதம், இல்ஹாம் முஸ்லிம், அல் சபாப் போன்ற இஸ்லாமிய அடிப்படைவாதங்களுக்கு சம்பிரதாய முஸ்லிம்கள் எதிரானவர்களென எமக்குத் தெரிகின்றது.
அவர்கள் அதற்கு எதிரானவர்கள் என்றாலும் அதனை சமூகத்தின் முன்னால் வந்து தெரிவிப்பதற்கு இந்த வஹாப்வாதி மாபியா இடமளிப்பதில்லை. அதனால் இந்தப்பிரச்சினை மிகவும் சிக்கலாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.