உலகத்திலேயே தௌஹீத்தின் பெயரால் தீவிரவாதத் தாக்குதல் செய்த ஒரேயொரு நபர் ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான்தான் என தமிழக இஸ்லாமிய மார்க்க அறிஞர் பி.ஜைனுல் ஆப்தீன் தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
தௌஹீத் என்பது இறைவனின் ஏகத்துவத்தையே வலியுறுத்திக் கூறுவதாக உள்ளது. தௌஹீத் அமைப்புக்கள் தீவிரவாதத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை. உலகில் காணப்படுகின்ற எந்தவொரு தௌஹீத் அமைப்பும் தீவிரவாதத்தினை ஏற்றுக்கொள்வதில்லை.
இலங்கையின் காத்தான்குடியில் தாருல் அஸர் என்ற அமைப்பில் இருந்து சஹ்ரான் தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அமைபப்பினை ஆரம்பித்து அதன் பின்னர் மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டார்.
உலகத்திலேயே தௌஹீத்தின் பெயரால் தீவிரவாதத் தாக்குதல் செய்த ஒரேயொரு நபர் இவர்தான். அதன் பின்னரே தௌஹீத் அமைப்புக்கள் மீது இத்தகைய குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன.
தாக்குதல் நடத்துவதற்கு பல காலம் முதலே சஹ்ரான் தான் ஆரம்பித்த அமைப்பில் இருந்தே நீக்கப்பட்டிருந்தார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளமையை இலங்கை சகோதரர்கள் ஊடாக அறிந்திருந்தோம்.
பின்னரான காலத்தில் சஹ்ரான் என்பவர் தௌஹீத் ஜமாத் கட்டமைப்புக்கள் சம்பந்தமாகவும் இஸ்லாமிய மார்க்கத்தில் குறிப்பிட்ட சில விடயங்கள் சம்பந்தமாகவும் மாறுபட்ட கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்.
இச்சமயத்தில் அவருடைய கருத்துக்கள் தவறான வழிகாட்டுதல்களை செய்யாதீர்கள் என்று சமூக வலைத்தளம் ஊடாகவே பதிலளிப்புக்களை செய்ய ஆரம்பித்திருந்தோம்.
இதனால் எமக்கும் அவர்களுக்கும் இடையில் சமூக வலைத்தளத்தில் முரண்பாடுகளே நீடித்து வந்தன.
இதனைவிடவும் நேரடியாக அவருடன் எந்த பழக்கத்தினையும் கொண்டிருக்கவில்லை. தமிழகத்தில் உள்ள எந்தவொரு தௌஹீத் அமைப்புக்களுடனும் அவர் தொடர்புபட்டிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.