மூன்று பெண்களை ஏமாற்றிய கணவன்.. கணவன் மீது புகார் அளித்த மனைவிகள்..!

அந்தமானில் டிரைவராக வேலை செய்து வரும் தங்களது கணவரின் 4–வது கல்யாணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவருடைய 2 மனைவிகள் போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்த தமிழரசி, அந்தமானை சேர்ந்த புஷ்பலதா ஆகியோர் கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கமி‌ஷனர் சுமித் சரணை தனித்தனியாக சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.

மனுவில்

தமிழரசி கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது; சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கணேசன் என்பவருக்கும், எனக்கும் கடந்த 2005–ம் ஆண்டில் கல்யாணம் நடந்தது. எங்களுக்கு 2 மகள் ஒரு மகன் உள்ளனர். நான் அந்தமானில் இருந்து சிவகங்கை வந்துவிட்டேன். அப்போது அவர் சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணை கல்யாணம் செய்து குடும்பம் நடத்தியதால் 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது அந்த பெண் இறந்து விட்டார்.

பின்னர் அவர் என்னுடன் திருமணம் நடந்ததை மறைத்து கடந்த 2014–ம் ஆண்டில் அந்தமானை சேர்ந்த புஷ்பலதா என்பவரை 3–வதாக கல்யாணம் செய்து கொண்டார். அவருக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

தற்போது எனது கணவர் அந்தமானில் டிரைவராக வேலை செய்து வருகிறார். அவர், அங்கு மற்றொரு பெண்ணை 4–வதாக கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்து வருகிறார். எனவே எனது கணவரின் 4–வது கல்யாணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

அடுத்ததாக, புஷ்பலதா கொடுத்த புகார் மனுவில்; கணேசனுக்கு தமிழரசியுடன் கல்யாணம் நடந்தது எனக்கு நன்றாக தெரியும். ஆனால் அவரை ஒதுக்கி வைத்துவிட்டதாக கூறியதை நம்பி கணேசனை கல்யாணம் செய்து கொண்டேன். பிறகு தான் அவர் தமிழரசியை ஒதுக்கி வைக்காமல் என்னை கல்யாணம் செய்து கொண்டது தெரியவந்தது. தற்போது எனது கணவர் 4–வதாக மற்றொரு பெண்ணையும் கல்யாணம் செய்ய உள்ளார்.

இது தொடர்பாக நான் அந்தமான் போலீசில் புகார் செய்தபோது பல பொய்களை சொல்லி போலீசாரையே அவர் ஏமாற்றிவிட்டார். எனவே அந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்துவதுடன், எங்களை ஏமாற்றிய கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட கமி‌ஷனர் சுமித் சரண், நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…