சிசிடிவி ல் சிக்கிய கணவனின் வெறிச்செயல்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஓடும் காரில் இருந்து மனைவியை கீழே தள்ளிவிட்ட கணவனின் வெறிச்செயல் சிசிடிவி கமெராவில் சிக்கியுள்ளது.

அருண் ஜீடு அமல்ராஜ் – ஆர்த்தி தம்பதியினருக்கு 11 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.

தனது கணவரை பிரிந்து மும்பையில் வசித்து வந்த ஆர்த்தி, அங்கிருந்தபடியே விவாகரத்து கோரியிருந்தார். ஆனால், குழந்தைகளின் எதிர்காலம் கருதி இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என நீதிமன்றம் அறிவுரை வழங்கியதையடுத்து, தனது வேலையை விட்டு ஆர்த்தி கணவருடன் சேர்ந்து வாழ்ந்தார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் 7 ஆம் திகதி அனைவரும் குடும்பத்தோடு ஊட்டிக்கு சுற்றுலா சென்றபோது , தனது பெற்றோருடன் சேர்ந்து ஆர்த்தியிடம் பிரச்சனை செய்து, நான் உன்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார் அருண்.

இந்த சம்பவம் தொடர்பாக ஊட்டி காவல் நிலையத்தில் ஆர்த்தி புகார் அளித்ததையடுத்து, நான் இனிமேல் இதுபோன்று நடந்துகொள்ள மாட்டேன் என காவல் நிலையத்தில் அருண் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கோவை துடியலூரை அடுத்து குருடம்பாளையத்தில் உள்ள ஆர்த்தியின் தங்கை வீட்டிலிருந்து ஆர்த்தியை சென்னைக்கு அழைத்து சென்ற அருண், சிறிது தூரம் சென்றவுடனேயே கொலைசெய்யும் நோக்கில் தனது பெற்றோருடன் சேர்ந்து அவரை கீழே தள்ளியுள்ளார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது. காரிலிருந்து கீழே விழுந்ததில் காயமடைந்த ஆர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.