இபிஎஸ்க்கு தினகரன் கண்டனம்!

தஞ்சாவூரில் மாற்று குடியிருப்பு தராமல் தொழிலாளர்களின் குடிசை வீடுகளை இடிப்பதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் எழில் நகரமாக்கி படகு விடுவதை விட ஏழை மக்களின் அடிப்படை வாழ்வுரிமை முக்கியமானது எனவும் அவர் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தஞ்சாவூரை எழில் நகரம் (ஸ்மார்ட் சிட்டி) ஆக்குவதாக கூறி, உரிய மாற்று ஏற்பாடுகளைச் செய்து தராமல் 2 ஆயிரம் கூலித்தொழிலாளர்களின் குடிசை வீடுகளை இடித்துத் தள்ளுவதைக் கண்டிக்கிறேன். பழனிச்சாமி அரசு உடனடியாக இந்நடவடிக்கையினை நிறுத்த வேண்டும்.

மத்திய அரசின் எழில் நகரம் திட்டத்தின் கீழ் தஞ்சாவூரில் அகழியைத் தூர் வாரி படகு போக்குவரத்து தொடங்குவதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். இதற்காக அப்பகுதியில் அரை நூற்றாண்டுக்கு மேலாக குடியிருக்கும் ஏழை தொழிலாளர்கள் சுமார் 2 ஆயிரம் பேரின் குடிசை வீடுகளை இடித்துத் தள்ளுவதற்கான நடவடிக்கையை பழனிச்சாமி அரசு மேற்கொண்டுள்ளது. ஆனால், இவர்களுக்கு இன்னும் முறையான மாற்று குடியிருப்பு வசதிகளை உருவாக்கித்தரவில்லை. அப்படியே கொடுத்தாலும் நகருக்கு வெளியே 10 கி.மீ தூரத்தில் குடியிருக்க இடம் தருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அங்கு வசிக்கும் தொழிலாளர்கள் அனைவரும் தஞ்சை நகரில் கூலி வேலைகளைச் செய்து வருபவர்கள். அவர்களின் குழந்தைகளும் நகருக்குள் இருக்கும் கல்வி நிலையங்களில் படித்து வருகிறார்கள். திடீரென வீடுகளை இடித்துத் தள்ளி, உரிய மாற்று ஏற்பாடும் செய்து தராவிட்டால் அவர்கள் எங்கே போவார்கள்? அந்தக் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாதா? அகழியை அழகுப்படுத்தி படகு சவாரி நடத்துவதுதற்காக ஏழைத் தொழிலாளர்கள் குடும்பத்தோடு தெருவில் நிற்க வேண்டுமா?

ஏற்கனவே இது போன்ற வழக்குகளில் உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் இருந்தும் பழனிச்சாமி அரசாங்கம் கண்ணை மூடிக்கொண்டு ஏழை மக்களை வதைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். தஞ்சை நகரப்பகுதியிலேயே அந்த ஏழைத் தொழிலாளர்களுக்கு மாற்று குடியிருப்பு வசதி செய்து தந்துவிட்டு, பிறகு எழில் நகரம் திட்டத்தைச் செயல்படுத்தட்டும். ‘மக்களுக்காகதான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் இல்லை’ என்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வைர மொழியை ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இதையும் மீறி ஏழைத் தொழிலாளர்களின் குடிசை வீடுகளை அகற்றியே தீருவோம் என்று அரசு பிடிவாதம் பிடித்தால், அதனைக் கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போராட்டம் நடத்தப்படும்” என தினகரன் தெரிவித்துள்ளார்.