உண்மையை போட்டுடைத்த ரோஜா.!

ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது இதில் 151 சட்டமன்ற தொகுதிகளில் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. கடந்த முறை ஆட்சி செய்த சந்திரபாபு நாய்டுவின் தெலுங்கு தேசம் கட்சி 24 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில், கடந்த மாதம் 30 ஆம் தேதி ஆந்திரா முதல்வராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார். இதனையடுத்து, நேற்று அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நடை பெற்று முடிந்த கூட்டத்தில் 5 பேர் துணை முதலமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். துணை முதலமைச்சராக ஜெகன் மோகன் நியமித்த 5 நபர்களில், தாழ்த்தப்பட்டோர் ஒருவரும் , பழங்குடியினர் ஒருவரும், சிறுபான்மையினர் ஒருவரும், பிற்படுத்தப்பட்டோர் ஒருவரும் மற்றும் காப்பு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், 5 துணை முதலமைச்சர்கள், 24 அமைச்சர்கள் உள்ளனர். கடந்த வாரம் அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற்றது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த முக்கிய தலைவர்களில் ஒருவரான நடிகையும், நகரி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவான ரோஜாவை துணை முதலமைச்சராக தேர்வு தேர்வு செய்யப்படுவர் அல்லது அமைச்சராக தேர்வு செய்யப்படுவர் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் அமைச்சரவையில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் ஆந்திராவில் இன்று முதல் முறையாக சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக நகரி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ரோஜா விமானம் மூலம் விஜயவாடா வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியவை, அமைச்சர் பதவி கிடைக்காததால் எந்த வருத்தமும் இல்லை. ஜாதிகளின் அடிப்படையில் எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்.