வேகக்கட்டுப்பாட்டை மீறிய நபர்: கூறிய பொய்யால் வந்த வினை!

சுவிட்சர்லாந்தில் வேகக்கட்டுப்பாட்டை மீறி வாகனம் ஓட்டிய நபர், பொலிசாரிடம் சிக்கினால் என்ன செய்வது என்று பயந்து, தப்புவதற்காக ஒரு பொய் சொன்னார்.

ஆனால் அந்த பொய்யே அவரை சிக்க வைத்துவிட இப்போது அவர் சிறைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

லாசேனிலுள்ள சுரங்கப்பாதை ஒன்றில் மணிக்கு 184 கிலோமீற்றர் வேகத்தில் காரில் பயணித்த ஒரு நபர், அங்கிருந்த கெமராவில் பிளாஷ் ஏற்பட்டதையடுத்து தான் சிக்கியதை அறிந்தார்.

பிடிபட்டால் அவரது ஓட்டுநர் உரிமத்தை இழக்க நேரிடுவதோடு, ஏற்கனவே அவர் மீதுள்ள கிரிமினல் வழக்கும் கிளறப்படும் என்பதை உணர்ந்த அவர் புத்திசாலித்தனமாக செய்வதாக நினைத்து ஒரு விடயம் செய்தார்.

அடுத்த நாள் பொலிஸ் நிலையம் சென்ற அவர், தனது கார் முந்தின இரவு 11 மணியளவில் திருட்டு போய் விட்டதாக புகாரளித்தார்.

துரதிர்ஷ்டவசமாக அவர் கெமராவில் சிக்கியது 10.30 மணிக்கு. உடனடியாக விசாரணையை தொடங்கிய பொலிசார் கெமராவில் சிக்கிய காரின் படத்தை எடுத்து பார்க்கும்போது, அதில் புகாரளித்தவரின் முகமே தெரிவதைக் கண்டுபிடித்தனர்.

ஏற்கனவே பல முறை குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த நபர் வசமாக சிக்கியதையடுத்து, அவருக்கு பொலிசார் அபராதம் விதித்துள்ளதோடு, அவர் ஓராண்டு வரை சிறை செல்ல நேரிடலாம் என்றும் தெரியவந்துள்ளது.