இன்றைய திருவிழா திருப்பலி காலை 10 மணிக்கு, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படும்.
ஜூன் மாதம் 13ஆம் திகதி என்றாலே கொழும்பு கொச்சிக்கடைவாழ் மக்களின் மனதில் குதூகலம் குடிகொண்டு விடும். ஆம், அன்றுதான் கொச்சிக்கடை புனித அந்தோனியாருக்குத் திருவிழா எடுக்கும் நாள், கோலாகலம் நிறைந்த நாள்.கொச்சிக்கடைவாழ் மக்கள் மட்டும்தானா…? இல்லை… நாடு முழுவதுமுள்ள புனிதரின் பக்தர்கள் ஆலயத்துக்கு ஓரணியாகத் திரண்டுவந்து கொண்டாடும் திருவிழா இது.
புனித அந்தோனியார்…
அவரை நினைத்தாலே போதும், மனதில் கவலைகள், துன்பதுயரங்கள், கஷ்டநஷ்டங்கள் எல்லாமே சூரியனைக் கண்ட பனி போல் மறைந்துவிடும். அத்தனை அற்புதமானவர் அவர். இன, மத பேதமின்றி அனைவருக்கும் அருள்பாலிப்பவர்.பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஆலயத்துக்கு வரும் பிற சமய பக்தர்களே இதற்குச் சாட்சி பகர்கின்றனர்.செவ்வாய்க்கிழமை விடிந்ததுமே, அன்றாட கடமைகளை முடிக்கிறார்களோ இல்லையோ புனிதரின் ஆலயத்தை நோக்கி வந்து அருள் பெறுபவர்கள் ஏராளம். காலை முதல், இரவு 11 மணி வரை ஆலயத்தில் கூடும் பக்தர்கள் தாம் எத்தனை எத்தனை.
செவ்வாய்க்கிழமை தோறும் ஆலயம் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். மக்கள் அலைஅலையாக வந்து போய்க் கொண்டிருப்பார்கள்.ஜூன் மாதம் என்றாலே, புனித அந்தோனியாரின் திருவிழாதான் கொழும்புவாழ் மக்களுக்கு நினைவுக்கு வரும். நத்தார், புதுவருட பண்டிகைகளைவிட, புனிதரின் திருவிழாவைக் கொண்டாடவே முழுமூச்சாகச் செயற்படுவர். ஜூன் 3ஆம் திகதியிலிருந்தே திருவிழா குதூகலம் களைகட்டி விடும்.
அன்றைய தினம் ஆலய வருடாந்தத் திருவிழாவுக்கான கொடி ஏற்றப்படும்.ஆலயத்தில் மட்டுமல்ல, ஆலய வட்டாரத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கான கொடிமரங்கள் நாட்டப்படும். ஒரு புனிதரின் திருவிழாவுக்கு இத்தனை கொடி மரங்கள் ஏற்றப்படுவது இலங்கையிலேயே கொழும்பு கொச்சிக்கடை வட்டாரத்தில் மட்டும்தான். கொடிகளுடன் வண்ண விளக்குகளின் ஒளி வெள்ளம் முழு வட்டாரத்தையும் சூழ்ந்து நிற்கும்.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த குண்டுவெடிப்பு – இத்தனை ஆடம்பரங்களோடு பொலிவுடன் காட்சிதந்து கொண்டிருந்த புனிதரின் ஆலயம் இன்று சோபை இழந்து நிற்கின்றது. இதனைப் பார்க்கும் போது வேதனை, மனதைத் துளைக்கின்றது.இந்த வட்டார மக்களுக்கு இதைவிட அதிர்ச்சி தரும் சம்பவம் வேறு எதுவும் இருக்க முடியாது.இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமுள்ள புனிதரின் பக்தர்களுக்குக் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் பேரதிர்ச்சியையே தந்திருந்தது.தன்னை அண்டிவந்த எவரையும் புனித அந்தோனியார் கைவிட்டதாகச் சரித்திரம் இல்லை. இரு கரம் கூப்பித் தன்னை நாடி வரும் பக்தர்களை அரவணைத்துக் காக்கும் கோடி அற்புதர் இவர்.காலம்தான் எத்தனை வேகமாக ஓடுகிறது? அந்தப் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று ஒன்றரை மாதங்களாகி விட்டன.
அன்றைய தினம் நடந்த அசம்பாவித சம்பவங்களில் மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. மழலைகள், சிறார்கள் உடல் சிதறி மாண்டு போனார்கள். இவை தவிர அவயவங்களை இழந்தும் காயமடைந்தும் அல்லலுறுவோர் பலர். இத்தனை நடந்தும், காலமோ, தனக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் உருண்டோடிக் கொண்டிருக்கின்றது.மாண்டவர் மீண்டும் வரப்போவதில்லை. ஆனால் உறவுகளைப் பிரிந்த உள்ளங்கள்….? அவை இன்னமும் ஓலமிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.தாயை, தந்தையை, கணவரை, மனைவியை, பிள்ளைகளை இழந்து தவிப்போர் என ஏராளமானோர் இன்னமும் உள்ளம் உடைந்து ஓலமிட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.ஏன், வெளிநாட்டிலிருந்து வந்திருந்த கோடீஸ்வரர், தம் மூன்று செல்வங்களையும் இழந்து விட்டார்… தம் நாட்டில் எப்படியெல்லாமோ ஆடம்பரமாகவும் ஆனந்தமாகவும் வாழ்ந்த இவர் நம் நாட்டுக்கு வந்து, தம் மூன்று செல்வங்களையும் பறிகொடுத்திருக்கிறார்.ஆனந்தமாக ஈஸ்டர் தினத்தைக் கொண்டாட நினைத்த அவரது வாழ்விலும் பேரிடி.அதேவேளை, தம் உறவுகளைத் தேடி இன்னமும் மக்கள் அலைந்து திரிகிறார்கள். “அவர்களுக்கு என்னதான் நடந்தது? எங்கே போனார்கள்…?” – இப்படி ஏங்கித் தவிப்போரும் இல்லாமலில்லை. ஏன்…? உடலங்கள் கிடைக்காமல் தனியே தலைப் பகுதிகளை வைத்து மரண சடங்குகளும் நடந்திருப்பதுதான் எல்லாவற்றையும்விடகொடுமையான, கொடூரமான செயலாகத் தோன்றுகிறது.புனித வியாழன், பெரிய வெள்ளி திருவழிபாடுகளை பயபக்தியோடு அனுசரித்து, அல்லேலூயா கீதம் பாடி, இரவு திருச்சடங்குகளையும் நிறைவேற்றிவிட்டு மறுநாள் ஆனந்தமாகக் குடும்பத்தினருடன் ஈஸ்டர் ஞாயிறு தினத்தைக் கொண்டாடலாம் எனக் காத்திருந்த கிறிஸ்தவர்களுக்கு…அந்தோ … கிடைத்தது அந்த அவலச் செய்தி…!
கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆலயங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் தந்த மாளா துயரச் செய்திதான் அது.எவருமே நினைத்திராத அந்தக் குண்டுவெடிப்பு அனர்த்தம் கிறிஸ்தவ மக்களை மட்டுமல்ல, நாட்டின் அனைத்துத் தரப்பினரையும் உலுக்கி எடுத்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.சமீப காலமாக, அமைதியான சூழலில் வாழ்ந்து கொண்டிருந்த நம் நாட்டு மக்களுக்கும் இது பேரதிர்ச்சியான சம்பவம் தான்.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலயம், மட்டக்களப்பு சீயோன் ஆலயம் என்பன பயங்கரவாதத் தாக்குதலில் சீரழிந்து போயின.இவற்றில் புனித அந்தோனியார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்றது. அப்படிப்பட்ட ஓர் ஆலயத்திலா, இப்படியான ஒரு குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ வேண்டும்?எத்தனையோ அற்புதங்களைச் செய்து மக்கள் மனதில் தனியொரு இடம்பெற்றவர் புனித அந்தோனியார்.பயங்கரவாத தாக்குதலையடுத்து ஆலயம் சோபை இழந்திருந்தது. ஓரளவு புனர்நிர்மாணப் பணிகள் முடிந்து ஆலயம் நேற்று அபிஷேகம் செய்யப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டது.இன்றைய திருவிழா திருப்பலி காலை 10 மணியளவில், ஆலயத்தில் ஒப்புக் கொடுக்கப்படுகிறது.வழமையாக திருவிழா தினத்தன்று, விடியற்காலை 4, 5, 6,7, 8, 9.30, 12.00 மணி எனத் தொடர்ந்து திருப்பலிப் பூசைகள் இடம்பெற்று வந்த ஆலயத்தில், இன்று ஒரே ஒரு திருப்பலி மட்டுமே ஒப்புக் கொடுக்கப்படுகிறது. அதுவும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்.ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ வரும் புனிதரின் தன்னிகரற்ற பவனியும் இன்று இல்லை. கொச்சிக்கடை வட்டாரத்தையே ஆட்கொண்டு, கம்பீரமாக பவனிவந்த புனிதர் இன்று ஆலயத்திலேயே ஐக்கியமாகி விட்டார்.இனிவரும் காலத்திலாவது இத்தகைய துர்ப்பாக்கிய நிலை ஒழிந்து சுமுகமான நிலைமை தோன்றுமா? பார்க்கலாம்.
– சந்திரா பர்னாண்டோ