சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சிகிச்சை முடிவடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவ பரிசோதனையை மேற்கொள்வதற்காக கடந்த மாத இறுதியில் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார்.
மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர், சிங்கப்பூரின் புகழ்பெற்ற மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் கோத்தபாய ராஜபக்ச, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட கோத்தபாய ராஜபக்ச வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய கோத்தபாயவின் உடல் நிலை சீரடைந்து வருகிறது. இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள ஹொட்டல் ஒன்றில் கோத்தபாய ராஜபக்ச ஓய்வெடுத்து வருகிறார்.
நான்கு வாரங்கள் அவர் படுக்கையில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தொழில்வல்லுனர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற கருத்துக்களை நிராகரிக்கும் நேரம் இது. மாறாக, தேசத்தை கட்டி எழுப்புவதில் அவர்களின் நிபுணத்துவத்தை பெறுவது அவசியம் என்று கோத்தபாய ராஜபக்ச நீண்ட நாட்களின் பின்னர் தன்னுடைய முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
அரசியலில் அவர் தீவிரமாக ஈடுபடுவார் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்து. இந்நிலையில் சிகிச்சையின் பின்னர் கோத்தபாய இது தொடர்பில் தன்னுடைய செயற்பாடுகளை வெளிப்படுத்துவார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளனர்.
இதுவொருபுறமிருக்க, சிங்கப்பூர் செல்லும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோத்தபாய ராஜபக்சவை நேரில் சந்தித்து அவரின் உடல் நலம் தொடர்பில் விசாரிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.