சிறுவயதிலிருந்து வாழ்க்கையில் பல துன்பங்களை சந்தித்து இந்தியாவின் முதல் பெண் பொறியாளராக ஆனவர் லலிதா.
சென்னைதான் லலிதாவின் தந்தைக்குப் பூர்வீகம். கிண்டி பொறியியல் கல்லூரியின் மின்பொறியியல் துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார் லலிதாவின் தந்தை பப்பு சுப்பாராவ்.
1919 ஆகஸ்ட் 27 அன்று பப்புவின் ஐந்தாவது மகளாகப் பிறந்தார் லலிதா. சாதாரண நடுத்தரக் குடும்பம். அந்தக் காலத்தின் வழக்கப்படி பதினைந்தே வயதில் திருமணம் செய்துகொடுக்கப்பட்டார் லலிதா. அதன் பின்னும் விடாமல் பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்தார்.
18வது வயதில் சியாமளா எனும் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் லலிதா. சியாமளா பிறந்து நான்கே மாதங்களில் இறந்து போனார் லலிதாவின் கணவர்.
மகளின் நிலைகண்டு வருந்திய பெற்றோர், அவரை அப்படியே சோர்ந்துபோக விடவில்லை. அவருக்குப் பிடித்த படிப்பைத் தொடர ஊக்கம் தந்தனர்.
உறவினரின் கடும் எதிர்ப்புக்கு இடையே லலிதா 1939-ம் ஆண்டு ராணி மேரி கல்லூரியில் முதல் வகுப்பில் இன்டர்மீடியட் தேர்ச்சி பெற்றார். அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம்.
சுப்பாராவ் அப்போதைய கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வர் கே.சி.சக்கோவிடம் கலந்தாலோசித்தார். அப்போதைய கல்வித்துறை இயக்குநராக இருந்த ஆங்கிலேயரான ஆர்.எம்.ஸ்டத்தாமின் அனுமதி கிடைத்தால், கிண்டி கல்லூரியிலேயே லலிதா பொறியியல் கற்கலாம் என்று அறிவுறுத்தினார் சக்கோ.
அந்தக் காலத்தில், இந்தியாவின் சொற்ப பொறியியல் கல்லூரிகளில் ஆண்கள் மட்டுமே பயின்றுவந்தனர். இதுபோன்ற தொழில்நுட்பப் பிரிவுகளில் பெண்கள் ஆர்வம்காட்டவில்லை. ஸ்டத்தாமைச் சந்தித்து சுப்பாராவ் சிறப்பு அனுமதி கோர, ஒருவழியாகப் பொறியியல் பட்டப்படிப்பு கற்க லலிதாவுக்கு அனுமதி கிடைத்தது.
1940-ம் ஆண்டு கிண்டி பொறியியல் கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்த லலிதாவுக்கு உள்ளூர உதறல்தான்.
சில மாதங்கள் என்ன, சில நாள்கள்கூட கல்லூரியில் அவரால் தொடர முடியாது என்றுதான் மற்ற மாணவர்கள் நினைத்தனர். பின்னர் பெண்களும் பொறியியல் கல்லூரியில் சேரலாம் என நாளிதழ்களில் விளம்பரம் தரப்பட்ட நிலையில் அந்த விளம்பரம் கண்டு இன்னும் இரண்டு பெண்கள் கிண்டி கல்லூரியை அணுகி, கட்டடக்கலை பொறியாளர் படிப்பில் சேர்ந்தனர்.
தனியாகக் கல்லூரியில் அவதியுற்ற லலிதாவுக்கு இப்போது லீலம்மா, தெரசா என்ற இரு தோழிகள் கிடைத்தனர். நிம்மதியுடன் படிப்பைத் தொடர்ந்தார் லலிதா. 1943-ம் ஆண்டு பொறியியல் பட்டதாரியானார்.
சிம்லா மத்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்புப் பணியில் சேர்ந்தார். இரண்டாண்டுகளுக்குப் பின் அவர் தந்தை செய்துவந்த ஜெலெக்ட்ரோமோனியம் (மின் இசைக்கருவி), புகையற்ற அவன் (oven) போன்ற ஆராய்ச்சிகளில் இணைந்து பணியாற்றினார். 1948-ம் ஆண்டு முதல் அசோசியேட்டட் எலெக்ட்ரிக்கல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்தியா முழுக்க சப்ஸ்டேஷன் வடிவமைப்பு, ஜெனரேட்டர் வடிவமைப்பு எனப் பல திட்டங்களில் பணி செய்தார். புகழ்பெற்ற பக்ராநங்கல் அணையின் ஜெனெரேட்டர்கள் இவர் வடிவமைத்தவையே.
1965-ம் ஆண்டு முதல், லண்டன் பெண் பொறியாளர்கள் சொசைட்டி மற்றும் இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயர்ஸ் போன்றவற்றில் முழுநேர உறுப்பினராகவும் இருந்தார். 1979-ம் ஆண்டு தன் அறுபதாவது வயதில் இறந்தார் லலிதா.
அவரின் மகள் சியாமளா கூறுகையில், என் அம்மாவின் மனவலிமை எனக்கு இருந்தால் நன்றாக இருக்கும். என்னைக் கவனித்துக்கொள்ள அப்பா இல்லை என்பதை நான் ஒரு போதும் உணர்ந்தது இல்லை.
என் நலனில் அக்கறைகொண்ட காரணத்தால் மறுமணமும் செய்துகொள்ளாமலேயே என் தாய் இருந்தார் என்று கூறியுள்ளார்.