இந்தியா-நியூசிலாந்து போட்டி நடக்குமா? வெளியானது கெட்ட அறிவிப்பு

உலகக் கோப்பை தொடரில் இன்று பலம் வாய்ந்த இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள போட்டி திட்டமிட்ட படி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சர்வதேச ஒரு நாள் போட்டி தரவரிசையில் 2வது இடத்தில் இருக்கும் இந்தியா, 4வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் மோதும் போட்டி யூன் 13ம் திகதி நாட்டிங்காம் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

நாட்டிங்காம் மைதானத்தில் தொடர்ந்து மழை பொழிந்து வருவதால் இரு அணிகளின் பயிற்சியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இந்தியா அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிப்பெற்றுள்ளது.

அதே போல் நியூசிலாந்து அணியும் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிப்பெற்றுள்ளது. இன்று இரு அணிகள் மோதும் போட்டியை காண உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

ஆனால், வானிலை முன்னறிவிப்பு வெளியிட்ட தகவல் ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆம், நாட்டிங்காமில் இன்று 90 சதவிதம் மழை பொழிய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம், இந்தியா-நியூசிலாந்து போட்டி ரத்தாக அதிக வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.