பொலிசாக ஆசைப்பட்ட மகனை கொன்று பெற்றோர் தற்கொலை!

தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாததால் மகனை கொன்று பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினத்தில் உள்ள வெளிபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில்குமார், லட்சுமி தம்பதி.

இவர்களுடைய 11 வயது மகன் ஜெகதீஸ்வரனை கொலை செய்துவிட்டு இவர்களும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

தனியார் பாடசாலையில் 6ம் வகுப்பு படித்துவந்த ஜெகதீஸ்வரனுக்கு கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் செந்தில்குமார் தம்பதி அவதிப்பட்டு வந்துள்ளனர்.

மட்டுமின்றி இவர்களை நம்பி எவரும் கடன் தர முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து தங்களின் ஒரே மகனுக்கு பாடசாலை திறந்து 10 நாட்கள் ஆகியும் கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருவரும் தவித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் இருவரும் சிறுவன் ஜெகதீஸ்வரனை சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றுள்ளனர். மேலும் பொலிஸ் ஆக வேண்டும் என்று சிறுவன் கனவு கண்டதால் அவனுக்கு பொலிஸ் உடையை அணிவித்து அதன் பின்னர் விஷத்தை கொடுத்துள்ளனர்.

பின்னர் அவர்கள் இருவரும் அதே உணவை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.