பெண் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!

மெக்சிகோவில் டபாஸ்கோ மாகாணம் ஹூய்மாங்குயில்லோ நகரை சேர்ந்த இளம் பெண் நோர்மா சராபியா. இவர் அந்த மாகாணத்தின் பிரபல பத்திரிகையில் நிருபராக பணியாற்றி வந்தார்.

ஹூய்மாங்குயில்லோ நகரில் நடைபெறும் கொலை, ஆள்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் குறித்தும், அதற்கு காரணமானவர்கள் பற்றியும் பத்திரிகையில் துணிச்சலாக எழுதி வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நோர்மா சராபியா வீட்டுக்கு, மர்ம நபர்கள் 2 பேர் வந்து கதவை தட்டினர். நோர்மா சராபியா கதவை திறந்ததும் அந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பினர்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த நோர்மா சராபியா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அவரை கொலை செய்த நபர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

உலகிலேயே மெக்சிகோவில் தான், பத்திரிகையாளர்கள் அதிக அளவில் கொல்லப்படுகிறார்கள். கடந்த 6 மாதங்களில் மட்டும் 6 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், 2000–ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை 100–க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.