வெளிநாட்டில் பணிபுரிபவர்களை குறிவைத்த இளம்பெண்..

வெளிநாட்டில் பணிபுரியும் இந்திய இளைஞர்களை குறி வைத்து இந்திய பெண் மிக பெரிய மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் கோரம் அர்ச்சனா. இவர் திருமண தகவல் மைய இணையதளத்தில் தன்னை மணக்க மாப்பிள்ளை வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

இதோடு தனது பெயர் புஷ்தயி என்ற தகவலோடு தனது புகைப்படம் என ஒரு அழகான பெண்ணின் புகைப்படத்தையும் அதில் வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த வெளிநாட்டில் பணிபுரியும் இந்திய இளைஞர் அர்ச்சனா அழகில் மயங்கி அவரை தொடர்பு கொண்டார்.

இருவரும் இணையதளம் மற்றும் போன் மூலம் பேசி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்கள்.

பின்னர் திருமண நிச்சயத்துக்கு தனக்கு புடவைகள், பிளாட்டினம் மோதிரம் வாங்க பணம் வேண்டும் என இளைஞரிடம் அர்ச்சனா கேட்க முகத்தையே பார்க்காத பெண்ணின் வங்கி கணக்குக்கு அவர் ரூ 1,50,000 அனுப்பினார்.

பின்னர் அர்ச்சனாவை தொடர்பு கொள்ள இளைஞர் முயன்ற போது போன் சுவிச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த இளைஞர் இது குறித்து ஹைதராபாத்தில் இருக்கும் தனது பெற்றோருக்கு தகவல் கொடுக்க அவர்கள் அர்ச்சனா வீட்டுக்கு சென்று பார்த்த போது அப்படி ஒருவரே அங்கு இல்லை என்றும் தாங்கள் ஏமாற்ற பட்டதும் தெரியவந்தது.

இது குறித்து அவர்கள் பொலிசில் புகார் அளித்த நிலையில் ஹைதராபாத்தின் பெகும்பெட் பகுதியில் இருந்த அர்ச்சனாவை பொலிசார் கைது செய்தனர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

பொலிசார் கூறுகையில், அர்ச்சனா இது போல திருமண தகவல் மைய இணையதளம் மூலம் பல பெயர்களில் பலரை ஏமாற்றி பணம் பறித்துள்ளார்.

வேறு அழகான பெண்ணின் புகைப்படத்தை அவர் இதில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இது தொடர்பாக ஏற்கனவே அவர் கடந்தாண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தார். வெளிநாட்டில் வேலை செய்யும் இளைஞர்கள் தான் அர்ச்சனாவின் குறியாக உள்ளனர்.

அர்ச்சனாவுக்கு கடந்த 2016-ல் பிரவீன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. ஆனால் அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு இந்த மோசடியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.