சென்னையில் பிரபல மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு வந்த இளம்பெண்ணை அறுவை சிகிச்சையின் போது பாலியல் தொல்லை கொடுத்து புளுவாய் துடிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தை சேர்ந்த சவுமிதா(30) என்ற பெண் பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது காலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது.
அதனால் சென்னை பெருங்குடியில் உள்ள அப்போலோவுக்கு ஆபரேஷனுக்கு கடந்த 4ம் திகதி வந்த சவுமிதாவிற்கு 6ம் திகதி அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். அதற்காக இடுப்புக்கு கீழ் உணர்விழக்க செய்யும் ஊசி போடப்பட்டது. முகத்தில் செயற்கை சுவாச கருவியும் பொருத்தப்பட்டது.
மருத்துவர்கள் காலில் அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருந்த தருணத்தில் லேப் டெக்னீஷியனாக வேலை செய்யும் டில்லி பாபு என்பவர் சவுமிதாவின் தலை பக்கம் நின்றுகொண்டு பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் சவுமிதா.
முகத்தில் சுவாச கருவி இருந்ததால் சவுமிதாவால் சத்தம் போட முடியவில்லை. ஸ்கிரீனுக்கு மறுபக்கம் மருத்துவர்கள் இருந்ததால், குறித்த இளைஞர் இஷ்டத்துக்கு அந்த பெண்ணை சீண்டி கொண்டிருந்தான். எந்த வகையிலும் இதை தடுக்க முடியாமல் புழுவாய் துடித்து போயுள்ளார் சவுமிதா.
அறுவைசிகிச்சை முடிந்த பின்பு தனக்கு நடந்த கொடுமையை மருத்துவரிடமும், மருத்துவ நிர்வாகத்திடமும் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளாத காரணத்தால் ஓன்லைன் மூலமாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தவலறிந்து விரைந்து வந்த பொலிசார் நடத்திய விசாரணையில், குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று மருத்துவர்கள் கூறியதால் பொலிசாரும் கண்டுகொள்ளாமல் சென்றுள்ளனர்.
கடைசியாக தனக்கு எந்த வழியிலும் உதவி கிடைக்காததால் டிஸ்சார்ஜ் ஆகும் தருணத்தில் பெண் தனக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், குறித்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பமாட்டேன் என்று அமர்ந்துள்ளார்.
அதன்பின்பு மீண்டும் பொலிசாருக்கு தகவல் கொடுத்தார். விரைந்துவந்த பொலிசார் குறித்த பெண்ணின் மருத்துவ அறிக்கையை அவதானித்துவிட்டு மனநலம் பாதிக்கப்பட்டவர் இல்லை என்றும் கால் அறுவை சிகிச்சை செய்வதற்காகவே வந்துள்ளார் என்பதை உறுதி செய்தனர்.
பின்பு விரிவான விசாரணை அறிக்கை காவல் ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் மொத்தம் 6 நாட்களாகி விட்டது. கடைசியில் குடியாத்தத்தை சேர்ந்த அந்த லேப்டெக்னீஷியனை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்ததுள்ளனர்.