கிழக்கு மாகாணத்தில் அதிக வெப்பம் நிலவுவதால், அதற்கு ஏற்ற மரமாக பேரீச்சையினை கருதியதாலேயே அவை அங்கு நாட்டப்பட்டதாக கிழக்கின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்த குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திவரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிக்கும்போதே ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது, “கிழக்கு மாகாணத்தில் ஏன் பேரீச்சை மரம் நாட்டப்பட்டது?” என்று விசாரணைக்குழுவால் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாணம் வெப்பமான பிரதேசம் என்பதால் வெப்பத்தை தாங்கி வளரும் மரங்களையே அங்கு நடமுடியும். அதனடிப்படையில்தான் பேரீச்சையினை நாட்டினோம்” என்றார்.
மட்டக்களப்பு, காத்தான்குடி நகரின் வீதிப் புறங்களில் காணப்படும் பேரீச்சம் பழ மரங்கள் இலங்கையை ஒரு அரபு தேசமாக காட்டுவதாக எழுந்த சர்ச்சைகளின் மத்தியில் நேற்றைய மேற்படி கேள்வி அமைந்ததாக சொல்லப்படுகிறது.
இதேவேளை, கிழக்கில் அரபு மொழியிலான பெயர் பலகை ஏன் வைக்கப்பட்டது? என்று விசாரணைக்குழு வினவியபோது, இலங்கை சட்டத்தில் அரபு மொழியை பயன்படுத்த வேண்டாம் என குறிப்பிடவில்லை என்றும் சுற்றுலாத்துறையினர் வருவதனால் அவர்களை கவரும் வகையிலேயே இதனை செய்தாகவும் கூறிய ஹிஸ்புல்லா இது சட்டத்திற்கு முரணானது அல்ல எனவும் அழுத்தமாக கூறினார்.