பகிரங்க அழைப்பு விடுத்துள்ள சஜித் பிரேமதாச!

அமைச்சுப் பதவியை ஏற்று மீண்டும் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிமிடம் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மக்களுக்கான சேவையை ஆற்றுவதற்காக முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிம் மீண்டும் அமைச்சுப் பதவியை ஏற்கவேண்டும்.

இவரது சேவை தற்போதைய நிலையில் நாட்டு மக்களுக்கு அவசியமானது என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னர், முஸ்லிம் அரசியல் தலைமைகள் குறிப்பாக, ரிசாத் பதியுதீன், ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் போன்றவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அவர்கள் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டன.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தலதா மாளிகையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகி அமைச்சுப் பதவி வகித்த கபீர் ஹாசிம், முஸ்லிம் அமைச்சர்களுடன் இணைந்து கூட்டாக பதவி விலகியிருந்த நிலையிலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியமையானது தவறான முன்னுதாரணம் என எதிர் கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். அதேவேளை, பதவி விலகிய ரிசாத் தவிர்ந்த ஏனைய முஸ்லிம் அமைச்சர்களிடம் மீண்டும் பதவிகளை ஏற்குமாறு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் சஜித் பிரேம தாச அறிக்கையின் மூலமாக பகிரங்க கோரிக்கையினை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.