கம்போடியா நாட்டில் விவாகரத்து கேட்ட மனைவியை கணவன் உயிருடன் எரித்துக்கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.
கம்போடியா நாட்டில் உள்ள பிரபலமான வனவிலங்குகள் பூங்காவில் யானை பாகனாக வேலை செய்து வருபவர் ப்ரம் டாம் (37). இவருக்கு 32 வயதில் லோவாஸ் ஸ்ரேனே என்கிற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.
மனைவியின் நடத்தையில் அதிக சந்தேகம் கொண்ட டாம், யாரேனும் ஆண்களுடன் லோவாஸ் பேசினாலே சண்டை போட ஆரம்பித்துவிடுவார்.
இது அடிக்கடி தொடர்ந்து வந்ததால், மனமுடைந்த லோவாஸ் கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டுள்ளார். பேஸ்புக்கில் வேறு ஒரு புதிய ஆண் நண்பர் கிடைத்ததால் தான் தன்னிடம் மனைவி விவாகரத்து கேட்பதாக கருதிய டாம், குழந்தைகளை வீட்டிற்குள் அடைத்து வைத்து வீட்டின் மேல் தீ வைக்க முயன்றுள்ளார்.
இதனை லோவாஸ் தடுக்க முயன்ற போது, அவர் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து உயிருடன் எரித்துள்ளார்.
பின்னர் வீட்டிற்க்கு தீ வைத்துவிட்டு, தானும் அரிவாளால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதற்கிடையில் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், பலத்த தீக்காயங்களுடன் இருந்த லோவாஸை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் வீட்டிற்குள் இருந்த இரண்டு குழந்தைகளையும் பத்திரமாக வெளியில் மீட்டெடுத்தனர்.
மருத்துவனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த லோவாஸ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதேசமயம் கழுத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட டாம், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் குணமடைந்ததும் கைது செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் பொலிஸார், டாம் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறியுள்ளனர்.