சத்தமில்லாமல் தாகத்தை தீர்க்கும் ரஜினி!

தமிழ்நாட்டில் தொடர்ந்து தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் சூழலில் ரஜினி மக்கள் மன்றம் ஒரு சிறப்பு திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வறட்சி நிலவி வருகிறது. தலைநகர் சென்னையில் மழை பொழிந்து 190 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. தண்ணீர் பஞ்சத்திலிருந்து மக்களின் தாகத்தை தீர்க்க கடந்த மூன்று மாதங்களாக ரஜினி மக்கள் மன்றத்தினர் தண்ணீர் விநியோகித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளுர், வட சென்னை உட்பட பல பகுதிகளில் லொறிகள் மூலம், ரஜினி மக்கள் மன்றத்தினர் குடிநீரை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.

இதன் விளைவாக #தாகம்_தீர்க்கும்_RMM என்ற ஹேஷ்டேக் ட்வீட்டரில் இந்தியா அளவில் இரண்டாவது இடத்தில் ட்ரெண்டிங் ஆகி உள்ளது. ரஜினி மக்கள் மன்றத்தினரின் இந்த சேவையை கேட்டறிந்த ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.