மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
டான்டனில் நடைபெற்ற உலகக்கிண்ணம் கிரிக்கெட் போட்டியின் 23வது ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் வங்கதேச அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்களை குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 96 ரன்கள் எடுத்திருந்தார்.
வங்கதேச அணி சார்பில் முகமது சைபுதீன், முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும், ஷாகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.
322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற கடினமான இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியில், துவக்க ஆட்டக்கார்களான சவுமியா சர்கார் 29(23) ரன்களிலும், தமிம் இக்பால் 48(53) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய ஷாகிப் அல் ஹசன் 124 ரன்கள் எடுத்தும், மறுபுறம் அதிரடியாக விளையாடிய லிட்டன் தாஸ் 69 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தும் அணியின் வெற்றிக்கு உதவினர்.
வங்காளதேச அணி 41.3 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்து 322 ரன்களை எளிதில் குவித்து வெற்றி பெற்றது.